இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு


இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிப்பு
x

image courtesy;twitter/@BCCI

தினத்தந்தி 10 Sep 2023 11:36 AM GMT (Updated: 10 Sep 2023 2:11 PM GMT)

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமிக்கு பதிலாக பும்ராவும், ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கே.எல்.ராகுலும் இடம்பெற்றனர்.

இதனையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் சுப்மன் கில் பவர்பிளேவை பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசி தள்ளினார். மறுமுனையில் நிதானம் காட்டிய ரோகித் பவர்பிளே முடிந்த பின் அதிரடியாக விளையாடினார். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தொடர்ந்து 2-வது முறையாக 100 ரன்களை தாண்டியது.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். முதலில் ரோகித் 56 ரன்களிலும், சிறிது நேரத்திலேயே கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களுடன் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஆட்டத்தின் இடையே தற்போது மழை குறுக்கிட்டுள்ளது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


Next Story