ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை
x

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான்- பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.

ஆமதாபாத்,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் 2 ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது தகுதி சுற்றில் குஜராத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனாலும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்திற்குள் வந்ததால் இன்னொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

2008-ம் ஆண்டு அறிமுக ஐ.பி.எல். கோப்பையை ராஜஸ்தான் கைப்பற்றியது. அதன் பிறகு அந்த அணி இறுதி சுற்றை கூட எட்டியதில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளது.

அதே சமயம் லீக் சுற்று முடிவில் 8 வெற்றி, 6 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்த பெங்களூரு அணி வெளியேற்றுதல் சுற்றில் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ரஜத் படிதாரின் அட்டகாசமான சதம் பிரமிப்பை ஏற்படுத்தியது. இதே போல் கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் விளாசி அசத்தினார்.

இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை போட்டுத்தாக்க ஆயத்தமாகிறார்கள். பெங்களூரு அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. ஆனால் 3 முறை இறுதிப்போட்டிக்கு வந்து தோற்று இருக்கிறார்கள். நீண்ட கால சோகத்தை தணிக்க இது அருமையான சந்தர்ப்பமாகும்.

இவ்விரு அணிகளும் லீக் சுற்றில் 2 முறை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டன. ஏறக்குறைய இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.


Next Story