எம்.எஸ்.தோனிக்கு இதுதான் கடைசி சீசனா? அவருடைய நெருங்கிய நண்பர் அளித்த சுவாரஸ்ய தகவல்


எம்.எஸ்.தோனிக்கு இதுதான் கடைசி சீசனா? அவருடைய நெருங்கிய நண்பர் அளித்த சுவாரஸ்ய தகவல்
x
தினத்தந்தி 3 March 2024 5:00 AM GMT (Updated: 3 March 2024 5:26 AM GMT)

இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார்.

ராஞ்சி,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையிலேயே சென்னை அணி இதுவரை 5 கோப்பைகளையும் வென்றுள்ளது.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்து வந்த வேளையில் கடந்த ஆண்டு இறுதியில் தோனி ரசிகர்களின் அன்பிற்கும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர்தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அவரது ஓய்வு குறித்து பலராலும் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரான பரம்ஜித் சிங் அளித்துள்ள சுவாரஸ்ய தகவல் தற்போது சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. தோனியின் ஓய்வு குறித்து பரம்ஜித் சிங் கூறுகையில்;-

"வரவிருக்கும் 2024 ஐ.பி.எல். சீசனுக்கு பிறகு தோனி ஓய்வுபெற வாய்ப்பு இல்லை. இன்னும் ஒன்று அல்லது இரண்டு சீசன்களில் விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார். தோனி நிச்சயம் 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் அதற்கு காரணம் அவருடைய மிகச்சிறந்த உடற்தகுதிதான்" என்று கூறியுள்ளார்.


Next Story