வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி - லபுஸ்சேன் சதம் அடித்து சாதனை


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி - லபுஸ்சேன் சதம் அடித்து சாதனை
x

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 598 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித் இரட்டை சதம் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 283 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து வெஸ்ட்இண்டீசுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 315 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் வார்னர் 17 ரன்னுடனும், லபுஸ்சேன் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. 9-வது சதம் அடித்த லபுஸ்சேன் 104 ரன்களுடனும், ஸ்டீவன் சுமித் 20 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லபுஸ்சேன் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி இருந்தார். இதன் மூலம் ஒரே டெஸ்டில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த 8-வது வீரர், 3-வது ஆஸ்திரேலியர் என்ற சிறப்பை லபுஸ்சேன் பெற்றார்.

இதனை அடுத்து 498 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 62 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது. 11-வது சதம் அடித்த கேப்டன் பிராத்வெய்ட் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற இன்னும் 306 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 7 விக்கெட் உள்ளது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.


Next Story