பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்தியாவுக்கு சாதகமான முக்கிய அம்சங்கள்...!


பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்தியாவுக்கு சாதகமான முக்கிய அம்சங்கள்...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 12 Sep 2023 3:16 AM GMT (Updated: 12 Sep 2023 5:06 AM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு தகுதி கண்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன் தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் பாதியில் நின்று போன ஆட்டம் நேற்று நடைப்பெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன், ராகுல் 111 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்னில் அடங்கியது. ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா காயத்தால் பேட் செய்யவில்லை. இதன் மூலம் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கு இன்னும் கிட்டத்தட்ட சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் அணியில் சில இடங்களில் யாரை ஆட வைப்பது, வீரர்களின் பார்ம், வீரர்களின் காயம் குறித்து கவலைப்பட்ட இந்திய அணி தற்போது இந்த ஆட்டத்தில் அபார வெற்றியின் மூலம் தீர்வு கண்டுள்ளது எனலாம்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமான சில முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

முதலாவது, ராகுலின் காயம் மற்றும் நம்பர் 4 பேட்டிங் வரிசை: நட்சத்திர வீரரான ராகுல் கடந்த சில மாதங்களாக காயத்தில் இருந்ததால் அவரது இடத்தில் யாரை ஆட வைக்கலாம் என்பதில் தீவிர குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ராகுல் தனது அபார பேட்டிங்கால் 4வது வரிசையில் இறங்கி சதம் அடித்து அசத்தியதோடு மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொண்டார். இதன் மூலம் விக்கெட் கீப்பிங் மற்றும் நம்பர் 4வது வரிசை பேட்ஸ்மேனுக்கான பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.

இரண்டாவதாக குல்தீப் யாதவ் பார்ம்: உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார். ஆனால் அவரது பார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பின. அவருக்கு பதில் சாஹலை சேர்த்திருக்காலம் எனவும் விவாதங்கள் எழுந்தன. மிடில் ஓவரில் இவரால் எப்படி பந்து வீச முடியும் என்ற கேள்விக்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் பதில் அளித்துள்ளார். நேற்று குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பார்ம்: இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சமீப காலமாக பார்ம் இன்றி தவித்தனர். ரனகள் குவிக்க சிரமப்பட்டனர். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டார். ஆனால் இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நால்வரும் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் கில் அரைசதமும், அதன் பின்னர் களம் இறங்கிய கோலி மற்றும் ராகுல் சதமும் அடித்து அசத்தினர். ரோகித், கில் கொடுத்த அதிரடி தொடக்கத்தால் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சிரமமின்றி ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான்காவதாக விராட் கோலி பார்ம்: கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்தும், தகர்த்தும் வரும் விராட் கோலியின் பார்ம் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கு மிகவும் முக்கியம். இவரது ஆட்டத்தை பொறுத்தே இந்தியாவின் மிடில் வரிசை எப்படி செயல்படுகிறது என தெரியும்.

உலகக்கோப்பை தொடருக்கு விராட் கோலியின் பார்ம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய கோலியால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்த சில பிரச்சினைகள் குறித்து கவலை அடைந்த ரசிகர்களுக்கு தற்போது நேற்றைய ஆட்டத்தின் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது எனலாம்.


Next Story