இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x

முதல் டெஸ்டில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் இங்கிலாந்து அணியினர் இன்றைய போட்டியில் விளையாட உள்ளனர்.

விசாகப்பட்டினம்,

இந்தியா- இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணியில் மாற்றம்

தொடக்க டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்ற போதிலும் 2-வது இன்னிங்சில் கோட்டை விட்டதால் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன் இலக்கை அடைய முடியாமல் இந்தியா 202 ரன்னில் 'சரண்' அடைந்தது. சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வியால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஐதராபாத் டெஸ்டில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்தால் ஒதுங்கியுள்ளனர். அவர்களது விலகல் அணிக்கு சற்று பின்னடைவு தான். ராகுலுக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் ரஜத் படிதாரும், ஜடேஜாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை ஒரே வேகப்பந்து வீச்சாளருடன் களம் காண இந்தியா முடிவு செய்யும் பட்சத்தில் முகமது சிராஜ் இடத்தில் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார் அல்லது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம்.

500-ஐ நோக்கி அஸ்வின்

தனது கடைசி 11 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்காத சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்த டெஸ்டில் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இதே போல் சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் அமைத்து தர வேண்டியது முக்கியம்.

சாதனையின் விளிம்பில் உள்ள மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இன்னும் 4 விக்கெட் எடுத்தால் டெஸ்டில் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். தொடக்க டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆலி போப் 196 ரன்கள் குவித்து 'ஹீரோ'வாக ஜொலித்தார். அவர் இந்திய சுழல் தாக்குதலை முட்டிப்போட்டு விளாசி (ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்) நிறைய ரன்கள் திரட்டி விட்டார். சர்வ சாதாரணமாக அவர் 'ஸ்வீப்' ஷாட்டுகளை அடித்த விதம் இந்தியாவுக்கு பாதகமாக மாறியது. இத்தகைய ஷாட்டுகளை அடிக்க விடாமல் தடுக்கும் வகையில் நமது பவுலர்கள் துல்லியமாக பந்துவீச வேண்டியது அவசியம். அதற்கு ஏற்ப பயிற்சி மேற்கொண்டுள்ள இந்திய பவுலர்கள் அதை களத்தில் கச்சிதமாக செயல்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆண்டர்சன் வருகை

தொடக்க டெஸ்டில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் இங்கிலாந்து அணியினர் இன்றைய போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்கள். முதல் டெஸ்டில் ஆலி போப்பின் சதமும், 2-வது இன்னிங்சில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லீயின் 7 விக்கெட் அறுவடையும் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 2-வது இன்னிங்சில் 'பாஸ்பால்' என்ற அதிரடி யுக்தி அவர்களுக்கு நன்றாகவே கைகொடுத்தது. அதே பாணியை 2-வது டெஸ்டிலும் கடைபிடிக்கும் முனைப்புடன் தயாராகி உள்ளனர்.

கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக சுழற்பந்து வீச்சாளர் 20 வயதான சோயிப் பஷீர் களம் இறங்குகிறார். இதே போல் இன்னொரு மாற்றமாக மார்க் வுட்டுக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

183 டெஸ்டில் விளையாடிய அனுபவசாலியான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய சூழலில் தன்னை நிரூபித்து காட்டுவார் என்றும் ஸ்டோக்ஸ் நம்பிக்கையுடன் கூறினார். ஆண்டர்சன் 2003-ம் ஆண்டு மே மாதம் டெஸ்டில் அறிமுகம் ஆன போது சோயிப் பஷீர் பிறக்கவே இல்லை. இப்போது அவருடன் இணைந்து ஆண்டர்சன் விளையாடுவது உண்மையிலேயே ஆச்சரியம் தான். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஜோ ரூட் கடந்த டெஸ்டில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அவரை தொடர்ந்து சுழலுக்கு பயன்படுத்த இருப்பதாகவும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார்.

ஆடுகளம் எப்படி?

மொத்தத்தில் வெற்றிப்பயணத்தை தொடர இங்கிலாந்தும், அவர்களின் வீறுநடைக்கு முடிவுகட்ட இந்தியாவும் வரிந்து கட்டுவதால் டெஸ்டில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆடுகளத்தை பொறுத்தவரை முதல் நாள் பேட்டிங்குக்கும், அதன் பிறகு முழுமையாக சுழலுக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் இதற்கு முன்பு இரண்டு டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. அதில் 2016-ம் ஆண்டில் இங்கிலாந்தையும், 2019-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவையும் இந்தியா தோற்கடித்து இருந்தது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ரஜத் படிதார், கே.எஸ்.பரத், அஸ்வின், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது சவுரப் குமார் அல்லது வாஷிங்டன் சுந்தர்.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோ, பென் போக்ஸ், டாம் ஹார்ட்லீ, சோயிப் பஷீர், ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story