ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றி


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை  ஆக்கி: இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 17 Dec 2021 9:19 PM GMT (Updated: 2021-12-18T02:49:32+05:30)

இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது.

டாக்கா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இந்திய அணியினர் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து இருந்ததுடன், எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு கடும் நெருக்கடி அளித்தனர். இந்திய அணியினர் கோல் அடிக்க எடுத்த பல முயற்சிகளை பாகிஸ்தான் பின்கள வீரர்களும், கோல் கீப்பர் மஜார் அப்பாசும் அருமையாக தடுத்து முட்டுக்கட்டை போட்டனர்.

இதற்கிடையில், 8-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் போட்டது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி துணை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்த கோலை அடித்தார். 42-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் பந்தை வலைக்குள் அடித்து அணியின் முன்னிலையை அதிகரித்தார். 45-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஜூனைத் மன்சூர் பதில் கோல் திருப்பினார். அதன் பிறகு மேலும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர பாகிஸ்தான் அணியினர் வரிந்து கட்டினர். ஆனால் அவர்களுக்கு கிடைத்த சில பெனால்டி கார்னர் வாய்ப்புகளை, இந்திய கோல் கீப்பர் சுரஜ் கார்கிரா தடுப்பு அரணாக நின்று முறியடித்தார்.

53-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் மீண்டும் ஒரு கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

3-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் தென்கொரியாவிடம் டிரா (2-2) கண்டு இருந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்று இருந்தது. 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா ஏறக்குறைய அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. பாகிஸ்தான் அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் ஜப்பானுடன் கோல் இன்றி ‘டிரா’ செய்து இருந்தது.

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை ஜப்பானை எதிர்கொள்கிறது.

Next Story