தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் இன்று தொடக்கம்


தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2021 7:20 PM GMT (Updated: 8 Oct 2021 7:20 PM GMT)

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் இன்று (சனிக்கிழமை) முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பையில் நடப்பு சாம்பியன் சீனா, இந்தியா, ஜெர்மனி உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. சீனா, நெதர்லாந்து, தஹிதி ஆகியவை அந்த பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளாகும். இந்திய அணியில் சாய் பிரனீத், ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி உள்பட 10 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி நாளை நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது.

பெண்களுக்கான உபேர் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜப்பான், இந்தியா, இந்தோனேஷியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதே பிரிவில் தாய்லாந்து, ஸ்பெயின், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடம் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை நாளை எதிர்கொள்கிறது. இந்திய பெண்கள் அணியில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இடம் பெறவில்லை. முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் அணிக்கு திரும்பி இருக்கிறார். சிந்து இல்லாததால் இந்திய அணி கடும் சவாலை சந்திக்க நேரிடும். இந்திய பெண்கள் அணி 2014, 2016-ம் ஆண்டுகளில் வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறது. இந்திய ஆண்கள் அணியை பொறுத்தமட்டில் கடந்த 11 ஆண்டுகளில் ‘நாக்-அவுட்’ சுற்றை எட்டியதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.


Next Story