சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ்
x

கோப்புப்படம் 

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ஜோகோவிச்- அல்காரஸ் இறுதிப்போட்டியில் மோதுகிறார்கள்.

சின்சினாட்டி,

சரிந்து மீண்ட அல்காரஸ்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 20-ம் நிலை வீரர் ஹூபெர்ட் ஹர்காக்சை (போலந்து) எதிர்கொண்டார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஹர்காக்ஸ் முதல் செட்டை வசப்படுத்தி 2-வது செட்டில் 5-4 என்ற கணக்கில் வெற்றியின் விளிம்புக்கு வந்தார். அதன் பிறகு 'மேட்ச் பாயிண்ட்' ஆபத்தில் இருந்து தற்காத்து மீண்டெழுந்த அல்காரஸ் இந்த செட்டை பிரேக்கருக்கு நகர்த்தினார். டைபிரேக்கரிலும் 1-4 என்று பின்தங்கி எழுச்சி பெற்ற அல்காரஸ் வரிசையாக 6 கேம்களை தனதாக்கி ஒரு வழியாக 2-வது செட்டை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து கடைசி செட்டில் அல்காரசின் அதிரடியை ஹர்காக்சால் சமாளிக்க முடியவில்லை.

2 மணி 18 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான ஆட்டத்தின் முடிவில் அல்காரஸ் 2-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் ஹர்காக்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.

20 வயதான அல்காரஸ் இந்த ஆண்டில் ருசித்த 53-வது வெற்றி இதுவாகும். நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் 3 செட் வரை போராடியே வென்று இருக்கிறார். இது குறித்து அல்காரஸ் கூறுகையில், 'உண்மையிலேயே இது எனக்கு மிகவும் கடினமான தொடர். எனக்குரிய ஒவ்வொரு ஆட்டமும் 3 செட்டுக்கு சென்றுள்ளது. ஆனால் இன்னொரு வகையில் மகிழ்ச்சி. இது போன்ற சவாலான ஆட்டங்கள் தான் என்னை நேர்மறை எண்ணத்துடன் மனதளவில் வலுவுடன் இருக்க உதவுகிறது' என்றார்.

ஜோகோவிச் அபாரம்

மற்றொரு அரைஇறுதியில் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-5), 7-5 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். கடந்த மாதம் விம்பிள்டன் இறுதிசுற்றில் அல்காரசிடம் தோல்வி அடைந்த ஜோகோவிச் அதற்கு பழிதீர்ப்பாரா ? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் கோகோ காப் (அமெரிக்கா) 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக்குக்கு (போலந்து) அதிர்ச்சி அளித்தார். ஸ்வியாடெக்குக்கு எதிராக 8-வது முறையாக ேமாதிய கோகோ காப் அதில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

முச்சோவா வெற்றி

இன்னொரு அரைஇறுதியில் 17-ம் நிலை வீராங்கனை கரோலினா முச்சோவா (செக்குடியரசு) 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை நட்சத்திரம் அரினா சபலென்காவை (பெலாரஸ்) 2 மணி 37 நிமிடங்கள் போராடி வெளியேற்றினார். வெற்றியை அடுத்து முச்சோவா தரவரிசையில் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார்.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் சின்சினாட்டி ஓபன் போன்ற உயரிய போட்டியில் முதல்முறையாக இறுதி சுற்றை எட்டியிருக்கும் கோகோ காப்பும், முச்சோவாவும் அடுத்து மகுடத்துக்காக மல்லுகட்டுகிறார்கள்.


Next Story