சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: ஜோகோவிச் மற்றும் பெண்கள் பிரிவில் கோகோ காப் ஆகியோர் சாம்பியன்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: ஜோகோவிச் மற்றும் பெண்கள் பிரிவில் கோகோ காப் ஆகியோர் சாம்பியன்
x

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

சின்சினாட்டி,

சர்வதேச டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா) கோதாவில் குதித்தனர். எதிர்பார்த்தபடியே முதல் கேமில் இருந்தே களத்தில் அனல் பறந்தது. முதல் செட்டில் 4-2 என்று முன்னிலை பெற்ற ஜோகோவிச் அதன் பிறகு கோட்டை விட்டார். இதே போல் 2-வது செட்டில் 2-4 என்று பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்த ஜோகோவிச் இந்த செட்டை டைபிரேக்கருக்கு நகர்த்தினார்.

டைபிரேக்கரில் ஒரு கட்டத்தில் அல்காரஸ் 6-5 என்ற முன்னிலையுடன் வெற்றியின் விளிம்புக்கு வந்தார். ஆனால் எதிராளியின் 'மேட்ச் பாயிண்ட்' ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்ட அனுபவசாலியான ஜோகோவிச் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து அந்த செட்டை தனதாக்கினார். தொடர்ந்து 3-வது செட்டிலும் நீயா-நானா? என்று இருவரும் மட்டையை சுழற்றியதால் பரபரப்பு எகிறியது. இதில் ஜோகோவிச் 5-3, 5-4 என்று வெற்றியை நெருங்கிய சமயத்தில் இந்த முறை அல்காரஸ், அவரது 'மேட்ச் பாயிண்ட்' வாய்ப்பை தகர்த்து டைபிரேக்கருக்கு இழுத்தார்.

பழிதீர்த்த ஜோகோவிச்

ஆனாலும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் போராடிய ஜோகோவிச், டைபிரேக்கரில் வெற்றிக்குரிய புள்ளியை எடுத்து ஒரு வழியாக அல்காரசின் சவாலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 3 மணி 49 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த மோதலில் ஜோகோவிச் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரசை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கினார். வலைக்கு அருகே வந்து பந்தை லாவகமாக அடிப்பதில் பிரமாதமாக செயல்பட்ட ஜோகோவிச் வெற்றி உறுதியானதும் மைதானத்தில் அப்படியே சாய்ந்தார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அவர் தனது பனியனை கிழித்து ரசிகர்களை நோக்கி ஆக்ரோஷமாக சிலிர்த்தார். சின்சினாட்டி ஓபனை அதிக வயதில் வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார்.

கடந்த மாதம் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிஆட்டத்தில் அல்காரசிடம் ஜோகோவிச் வீழ்ந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்த்து இருக்கிறார்.

சின்சினாட்டி ஓபன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் கோப்பையாகும். அவர் கைப்பற்றிய 39-வது மாஸ்டர்ஸ் கோப்பை இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் 95-வது சர்வதேச பட்டமாக அமைந்தது.

முதலிடத்தை நெருங்குகிறார்

வாகை சூடிய ஜோகோவிச்சுக்கு ரூ.8½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த அல்காரசுக்கு ரூ.4½ கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

பின்னர் 36 வயதான ஜோகோவிச் கூறுகையில், 'வெற்றியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அதை விவரிப்பது கடினம். எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் விளையாடிய மிகவும் கடினமான ஆட்டங்களில் இதுவும் ஒன்று. தொடக்கத்தில் இருந்து கடைசி வரை இருவருமே ஏற்ற, இறக்கத்தை எதிர்கொண்டோம். ஒட்டுமொத்தத்தில் கடினமான, பரவசமூட்டும் ஒரு ஆட்டமாக இது இருந்தது' என்றார்.

20 வயதான அல்காரஸ் கூறுகையில், 'ஜோகோவிச்சுக்கு எதிராக விளையாடுவது அற்புதமானது. அவரை போன்ற சாம்பியன் வீரருடன் மோதும் போது நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. அவருக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டார்.

23 கிராண்ட்ஸ்லாம் வென்ற உலக சாதனையாளரான ஜோகோவிச் உலகத் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவருக்கும் (9,795 புள்ளி), தற்போது முதலிடம் வகிக்கும் அல்காரசுக்கும் (9,815 புள்ளி) இடையே உள்ள புள்ளி வித்தியாசம் வெறும் 20 தான். விரைவில் தொடங்கும் அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் தொடக்க சுற்றில் வெற்றி பெற்றாலே 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுவார்.

பெண்கள் பிரிவில் கோகோ காப்

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய பட்டத்தை 19 வயதான கோகோ காப் வெல்வது இதுவே முதல் முறையாகும். அவருக்கு ரூ.3¾ கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

இந்த வெற்றியின் மூலம் புதிய தரவரிசை பட்டியலில் கோகோ காப் 7-ல் இருந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளார். முச்சோவோ 7 இடங்கள் உயர்ந்து முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார். அரைஇறுதியில் தோல்வியை தழுவிய போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்கிறார்.

நடாலை பின்னுக்கு தள்ளிய ஜோகோவிச்

ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் ஜோகோவிச் இதுவரை 1,069 ஆட்டங்களில் வெற்றியும், 211 ஆட்டங்களில் தோல்வியும் கண்டுள்ளார். அதிக வெற்றிகளை குவித்த வீரர்களின் பட்டியலில் ஸ்பெயினின் ரபெல் நடால், அமெரிக்காவின் இவான் லென்டில் (இருவரும் தலா 1,068 வெற்றி) ஆகியோருடன் 4-வது இடத்தை பகிர்ந்து இருந்த ஜோகோவிச் இப்போது அவர்களை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த வகையில் முதல் இரு இடங்களில் அமெரிக்காவின் ஜிம்மி கன்னோர்ஸ் (1,274 வெற்றி), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (1,251 வெற்றி) ஆகியோர் உள்ளனர்.


Next Story