ஆந்திராவில் பா.ஜனதாவின் புதுக்கணக்கு!


ஆந்திராவில் பா.ஜனதாவின் புதுக்கணக்கு!
x

ஆந்திராவில் தன் கால் தடத்தை பதிக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் பா.ஜனதா கைகோர்த்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் 18-வது மக்களவைக்கான தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே, 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா, இந்த முறையும் வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்று சபதம் எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா மொத்தம் உள்ள 543 இடங்களில் 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேலும் உறுதியாக வெற்றிபெறும் என்று போகும் இடங்களில் எல்லாம் உறுதிபட சொல்லி வருகிறார்.

அவரைத்தொடர்ந்து, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட அனைத்து தலைவர்களும் இதை ஒரு சவாலாகவே சொல்லி வருகிறார்கள். சொன்னதை நிறைவேற்றிக்காட்டவேண்டும் என்ற முனைப்பில், பா.ஜனதா மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறது. கடந்த தேர்தலில் எந்த மாநிலங்களில் எல்லாம் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லையோ அங்கெல்லாம் இந்த முறை வெற்றிக் கணக்கை தொடங்கிவிடவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளது.

பா.ஜனதா பலமில்லாத மாநிலங்களில், குறிப்பாக பீகார், மராட்டியம், அசாம் போன்ற மாநிலங்களில், மாநில கட்சிகளுடன் கூட்டணிவைத்து போட்டியிட்டு, அந்த மாநில கட்சிகள் பெரும்பாலான இடங்களிலும், பா.ஜனதா சில இடங்களிலும் வெற்றிபெற கணக்கை போட்டுவருகிறது. பா.ஜனதா குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியாகத்தானே கருதப்படும் என்பதால், அந்த வகையிலும் பா.ஜனதாவுக்கு சாதகம்தான். அதே முயற்சியில், தென் மாநிலங்களிலும் தன் கணக்கை தொடங்கிவிடவேண்டும் என்று முயற்சித்து வருகிறது.

ஆந்திராவில் தன் கால் தடத்தை பதிக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கைகோர்த்துள்ளது. மொத்தம் உள்ள 25 தொகுதிகளில், தெலுங்கு தேசம் 17 இடங்களிலும், பா.ஜனதா 6 இடங்களிலும், ஜன சேனா கட்சி 2 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு, ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது என்பதால், மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் பா.ஜனதா 10 இடங்களிலும், ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், மீதமுள்ள இடங்களில் தெலுங்கு தேசமும் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா அணியில் தெலுங்கு தேசம் இணைவது இது புதிதல்ல. 1996-ல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து வாஜ்பாய் அரசாங்கத்திலும், நரேந்திரமோடி அரசாங்கத்திலும் அங்கம் வகித்து இருக்கிறது.

2018-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, இப்போது மீண்டும் சேர்ந்து இருப்பது, பிரிந்தவர் கூடிய உணர்வையே சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்படுத்தும். பா.ஜனதாவைப் பொறுத்தமட்டில், ஆந்திராவில் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கடந்த தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை, ஓட்டு சதவீதமும் 0.98 ஆகத்தான் இருந்தது. அதுபோல, சட்டசபை தேர்தலிலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல், ஓட்டு சதவீதமும் 0.84 ஆகத்தான் இருந்தது. ஆக, இந்தமுறை மீண்டும் உருவான கூட்டணியால், பா.ஜனதா மீண்டும் தன் கணக்கை ஆந்திராவில் தொடங்க முடியும். தெலுங்கு தேசமும் மத்திய அரசாங்கத்தில் மீண்டும் அங்கம் வகிக்க முடியும். மொத்தத்தில் இந்த கூட்டணி இரு தரப்புக்கும் லாபம் தரும் கூட்டணியாகும்.


Next Story