‘2.0’, ‘விஸ்வரூபம்-2’; ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரஜினிகாந்தின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2017-04-25 21:40 GMT
சென்னை,

இந்த படங்களுக்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்து முந்தைய காலங்களில் வருடத்துக்கு இரண்டு, மூன்று படங்கள் திரைக்கு வந்தன. அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று குறைந்து விட்டது. அதிக பொருட்செலவுகள், உலகத்தரத்தில் தொழில் நுட்பங்களை புகுத்துதல், வெளிநாடுகளில் படப்பிடிப்புகளை நடத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன.

ரஜினிகாந்த் நடித்து 2010-ம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குனர் ஷங்கர் அப்போதே திட்டமிட்டார். அதற்கான திரைக்கதையையும் உருவாக்கினார். ஆனால் படப்பிடிப்பு உடனடியாக தொடங்காததால், இடையில் ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்திலும், ‘லிங்கா’ படத்திலும் ரஜினிகாந்த் நடித்தார். 2014-ம் ஆண்டு இந்த படங்கள் திரைக்கு வந்தன.

ரூ.350 கோடி

அதன்பிறகு எந்திரன் இரண்டாம் பாகத்துக்கு ‘2.0’ என்று பெயர் சூட்டி ரூ.350 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க, படப்பிடிப்பு பணிகள் 2015-ல் தொடங்கின. சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பல கோடி செலவில் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், கடைவீதிகள், தார் ரோடுகள், எந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞான கூடங்கள் ஆகியவற்றை அரங்குகளாக அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.

ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற நேர்ந்ததால், படப்பிடிப்பில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இடையில் அவர் ‘கபாலி’ என்ற படத்தில் நடித்து அது கடந்த வருடம் ஜூலை மாதம் திரைக்கு வந்து விட்டது. தீபாவளிக்கு ‘2.0’ படம் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் நாயகியாக எமிஜாக்சனும், வில்லனாக அக்‌ஷய்குமாரும் நடிக்கிறார்கள்.

விஸ்வரூபம்-2

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் 2013-ம் ஆண்டு திரைக்கு வந்ததும், அடுத்த சில மாதங்களிலேயே ‘விஸ்வரூபம்-2’ படமும் வெளிவரும் என்று அறிவித்தனர். ஆனால் நிதி பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்டபடி அந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு கமல்ஹாசன் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய 3 படங்களில் நடித்து விட்டார். தொடர்ந்து சபாஷ்நாயுடு படத்திலும் நடிக்க தொடங்கினார்.

விஸ்வரூபம்-2 படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு. விஸ்வரூபம்-2 படத்தை 2017-ம் ஆண்டுக்குள் வெளிகொண்டு வருவதற்கான பொறுப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் ஏற்றுள்ளது. ‘விஸ்வரூபம்-2’ படத்தை இனி நீங்கள் பார்க்க முடியும். அரசியல் குறுக்கீடுகள் இருந்தபோதிலும் நான் தொடர்ந்து போராடினேன். அதுவும் நல்ல அனுபவம்தான்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாத இடைவெளியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கான இறுதி கட்ட பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்