சிம்பு படத்தின் காலை காட்சிகள் ரத்து தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள் ஏமாற்றம்

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Update: 2017-06-23 21:45 GMT
சென்னை,

சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை நேற்று தமிழகம் முழுவதும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த படத்தை வெளியிட தடை கேட்டு எம்.ரமேஷ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். படத்தின் தயாரிப்புக்கு நிதி திரட்ட உதவி செய்ததாகவும் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சம் கொடுத்ததாகவும் அந்த பணத்தை திருப்பி தராமல் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

படத்தின் தயாரிப்பாளர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். படத்தை தடையின்றி திரைக்கு கொண்டு வர ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உத்தரவாதமாக அளிப்பதாகவும் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரூ.25 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதனால் படம் சிக்கல் இல்லாமல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்னை மற்றும் வெளியூர்களில் உள்ள திரையங்குகளில் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக டிக் கெட்டுகளும் விற்கப்பட்டன. காலை 6 மணியில் இருந்து சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் சிறப்புகாட்சிக்காக அதிகாலையிலேயே தியேட்டர்களில் திரண்டார்கள். ஆனால் திட்டமிட்டபடி எந்த தியேட்டரிலும் காலை காட்சிகள் திரையிடப்படவில்லை. காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் படத்தை திரையிடுவதற்கான ‘கியூப் கீ’ வராததால் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் சார்பில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் தீர்வு ஏற்பட்டு பகல் 12 மணிக்கு மேல் படம் வெளியானது

மேலும் செய்திகள்