சினிமாவுக்கு வந்த 70 புதுமுக நடிகைகள் ஒரு படத்திலேயே காணாமல் போனார்கள்

பெரிய நடிகைகளுக்கு போட்டியாக இந்த ஆண்டு 70 புதுமுக நடிகைகள் சினிமாவுக்கு வந்துள்ளனர், இவர்களில் சிலரை தவிர பல நடிகைகள் முதல் படத்திலேயே காணாமல் போய் விட்டார்கள்.

Update: 2017-12-28 23:30 GMT

சென்னை,

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு புதுமுக கதாநாயகிகள் வரத்து அதிகமாக இருந்தது. தமிழகத்தில் இருந்தும் கேரளா, ஆந்திரா, மும்பையில் இருந்தும் நிறையபேர் சினிமா ஆசையால் நடிக்க வந்தனர். மொத்தம் 210 படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவற்றில் கதாநாயகிகளாக நடித்துள்ள சுமார் 70 பேர் இந்த ஆண்டு அறிமுகமானவர்கள்.

இவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தனர். பிறமொழி படங்களில் நடித்து விட்டு தமிழில் அறிமுகமான நடிகைகளுக்கு மட்டும் அதிகமான சம்பளம் கொடுத்தனர். இவர்களில் பலர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால் வாய்ப்பு கிடைக்காமல் முதல் படத்திலேயே காணாமல் போய் விட்டனர்.

சினிமாவை நம்பி வந்த இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பெரிய நடிகர்களுக்கு ஜோடியாகவும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தும் இருந்த சில நடிகைகள் மட்டும் மார்க்கெட்டை தக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.

இந்த வருட புதுமுக நடிகைகளில் அதிக கவனம் பெற்றவர் ‘அருவி’ படத்தில் கதாநாயகியாக வந்த அதிதிபாலன். இவர் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து இருந்தார். கிளைமாக்ஸ்சில் நோய் முற்றி எலும்பும், தோலுமாக வந்து படம் பார்த்தவர்களை உலுக்கினார். ரஜினிகாந்த் அருவி படத்தை பார்த்து விட்டு போன் செய்து பாராட்டும் அளவுக்கு கதை, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சர்வதேச விருதுகளும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. அதிதிபாலனுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

‘வனமகன்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக அறிமுகமான சாயிஷாவும் ரசிகர்களை கவர்ந்தார். இவரது நடிப்பும், பம்பரமாக சுழன்று ஆடிய நடனமும் பேசப்பட்டன. கார்த்தி, விஜய்சேதுபதி படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். முன்னணி கதாநாயகிகளுக்கு கடும் போட்டியாக இவர் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘மேயாத மான்’ படத்தில் வைபவ் ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கரும் சிறந்த புதுமுக நடிகையாக பேசப்பட்டார். இவர் டெலிவி‌ஷனில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். வேறு படங்களிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

காதல் கசக்குதய்யா, பள்ளிப்பருவத்திலே படங்களில் நடித்த வெண்பா, கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், இவன் தந்திரன் படத்தில் நடித்த ஸ்ரத்தா, காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த அதிதிராவ், கவன் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த மடோனா செபஸ்டியன் ஆகியோரும் கவனிக்க வைத்தனர்.

கடந்த வருடங்களில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து இருந்த கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்துள்ளார். மஞ்சிமா மோகன், ஆனந்தி, நிவேதா பெத்துராஜ், தான்யா ரவிச்சந்திரன், ரெஜினா, மகிமா, சாத்னா டைட்டஸ், ரித்திகா சிங் ஆகியோரும் மார்க்கெட்டை தக்கவைத்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்