சினிமா செய்திகள்
நடிகை சோனம் கபூருக்கு 8-ந் தேதி திருமணம்

நடிகை சோனம் கபூருக்கு 8-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
மும்பை,

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனம் கபூர். இவர் நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமான ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

32 வயதான நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் வருகிற 8-ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சோனம் கபூரின் குடும்பத்தினர் நேற்று அறிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-

சோனம் கபூர்-ஆனந்த் அகுஜாவின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். வருகிற 8-ந் தேதி மும்பையில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. நாங்கள் இந்த சிறப்பான தருணத்தை உற்சாகமாக கொண்டாட உள்ளோம். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆசிர்வாதத்திற்கும் நன்றி இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மும்பையில் உள்ள சோனம் கபூரின் வீடு திருமண நிகழ்ச்சி காரணமாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.