“சினிமாவில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்” -நடிகை தமன்னா

சினிமாவில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என நடிகை தமன்னா தெரிவித்தார்.

Update: 2018-05-01 23:08 GMT

தமன்னாவுக்கு இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் உள்ளன. சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்திலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவியுடனும் நடிக்கிறார். மேலும் 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். கடந்த வருடம் பாகுபலி படம் அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. சினிமா வாழ்க்கை குறித்து தமன்னா கூறியதாவது:-

“சினிமா ஒரு கல்லூரி மாதிரி. தினமும் நிறைய விஷங்களை கற்றுக்கொடுக்கிறது. நான் பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே சினிமாவுக்கு வந்து விட்டேன். கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் இருந்தது. ஆனால் சினிமாவில் அந்த அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. நான் தெலுங்கில் முதலாவது நடித்த ‘ஹேப்பி டேஸ்’ படத்தில் கல்லூரி மாணவியாகத்தான் வந்தேன்.

பாடங்களை தீவிரமாக படிப்பது, தேர்வுக்கு தயாராவது, ரிசல்ட்டுக்காக காத்து இருப்பது என்று எல்லா அனுபவங்களும் கிடைத்தன. சைரா படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறேன். இது சரித்திர படம். இதனால் வரலாற்று கதைகளை படித்து அந்த காலகட்டத்து வாழ்க்கை முறைகள் பற்றி தெரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். பாகுபலி படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போடுவது, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்தேன். இன்னொரு படத்துக்காக நடனம் கற்றேன்.” இவ்வாறு தமன்னா கூறினார்.

மேலும் செய்திகள்