“மதிப்பெண்ணுக்காக படிக்கும் கல்வி முறையை மாற்ற வேண்டும்”: நடிகர் சூர்யா பேச்சு

அகரம் கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடந்த ‘அறம் செய்ய விரும்பு’ நூல் வெளியீட்டு விழாவில் அதன் நிறுவனரான நடிகர் சூர்யா கலந்து கொண்டார்

Update: 2018-05-06 22:30 GMT
அகரம் கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடந்த ‘அறம் செய்ய விரும்பு’ நூல் வெளியீட்டு விழாவில் அதன் நிறுவனரான நடிகர் சூர்யா கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

“தாய் தந்தையர் படிப்பறிவில்லாமலும் படிக்க தேவையான புத்தகம் பேனா வாங்க முடியாமலும் தவிக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குவதற்காக அகரம் அறக்கட்டளையை தொடங்கினோம். தகுதியும் திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா? வறுமை காரணமாக கூலி வேலைக்கு செல்ல வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு விடையாகத்தான் இந்த அமைப்பை ஆரம்பித்தோம்.

திறமை வாய்ந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களை வழிநடத்துகிறோம். ஒரு குழந்தையை படிக்க வைத்தாலே அந்த குடும்பத்தில் எல்லா குழந்தைகளும் படிக்கும். இந்தியா, கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கும் கல்வியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் கட்டாயம் இருக்கிறது.

பல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த குறைகளை போக்க வேண்டும். மாற்றத்தை கொண்டுவந்தால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும். இலவச கல்வி, மதிய உணவு திட்டங்களினால்தான் சில மாணவர்கள் படிக்க முடிந்தது.

இப்போது உள்ள கல்வியானது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். மதிப்பெண்ணுக்காக மட்டுமே படிக்கும் நிலைமை மாற வேண்டும். நூலகம் இல்லாத ஊரில்கூட டாஸ்மாக் கடை உள்ளது. நாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.”

இவ்வாறு சூர்யா பேசினார்.

மேலும் செய்திகள்