சினிமா செய்திகள்
கேரளாவில் நீட் தேர்வின்போது தந்தையை இழந்த “மாணவர் மகாலிங்கம் கல்வி செலவை ஏற்பேன்”: நடிகர் விஷால்

கேரளாவில் நீட் தேர்வின்போது தந்தையை இழந்த மாணவர் மகாலிங்கம் கல்வி செலவை ஏற்பேன் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் விஷால் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஏற்றார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் மத்தியிலும் தங்கள் மருத்துவ கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறிகொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன்.

இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்க வேண்டும் என்ற கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்ய தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்.”

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.