சினிமா செய்திகள்
சவாலை எதிர்கொள்ளும் ரகுல்பிரீத் சிங்

சவாலை எதிர்கொள்ளும் ரகுல்பிரீத் சிங், கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த தீரன் அதிகாரம் ஒன்று வசூல் பார்த்தது.
ரகுல்பிரீத் சிங் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறார். கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த தீரன் அதிகாரம் ஒன்று வசூல் பார்த்தது. இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்.ஜி.கே படத்தில் நடிக்கிறார். மேலும் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளது. சினிமா அனுபவங்கள் குறித்து ரகுல்பிரீத் சிங் சொல்கிறார்.

“சினிமாவில் எதுவுமே எனக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. முதல் பட வாய்ப்பையும் வெற்றிகளையும் கஷ்டப்பட்டே பெற்றேன். அதோடு சினிமா உலகம் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது. தமிழ் படங்களில் அதிகம் நடிக்கிறேன். இந்தி, கன்னட பட வாய்ப்புகளும் வந்துள்ளன. என்னால் வேலை செய்யாமல் சும்மா இருக்க முடியாது.

சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் வாழ்க்கை இறங்குமுகமாக இருந்தது. அப்போது சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டதாலேயே இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். 10 மாதத்தில் 3 பெரிய பட வாய்ப்புகள் எனது கைகளுக்கு வந்து திடீரென்று பறிபோய் விட்டது. அதைப் பார்த்து வேதனையில் முடங்கி விடாமல் சவாலாக ஏற்று கஷ்டப்பட்டு உழைத்ததால் முன்னேறினேன். எல்லோரும் சவால்களை எதிர்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.” இவ்வாறு ரகுல்பிரீத் சிங் பேசினார்.