சினிமா செய்திகள்
மகளுடன் ஆட்டோவில் பயணம் செய்த அமிதாப்பச்சன்

கோடீசுவர வாழ்க்கையில் திளைக்கும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆட்டோவில் பயணித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த சொகுசு கார்கள், நட்சத்திர ஓட்டல்களில் டீ, காப்பி என்று கோடீசுவர வாழ்க்கையில் திளைக்கும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆட்டோவில் பயணித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

மும்பை சாலைகள் பொதுவாகவே நெரிசல் மிகுந்தவை. முக்கிய நேரங்களில் கார்களை விட இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களில் செல்வதே வசதி என்கிறார்கள்.

அமிதாப்பச்சன் தனது மகள் ஸ்வேதாவுடன் அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டி இருந்தது. காரில் போனால் நேரமாகி விடும் என்று கருதி வீட்டின் முன்னால் ரோட்டில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டார்.

அமிதாப்பச்சன் தனது ஆட்டோவில் ஏறியதை பார்த்தும் டிரைவர் ஒரு நிமிடம் ஆடிப்போனார். பிறகு அவர் சொன்ன இடத்தில் கொண்டு போய் இறக்கி விட்டு சென்றார். ஆட்டோ பயண அனுபவம் குறித்து அமிதாப்பச்சன் சொல்கிறார்:-

“எனது மகளுடன் ஆட்டோவில் பயணித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. டிரைவரிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று கேட்டேன். ரூ.1000 சம்பாதிப்பேன் என்றார். படப்பிடிப்புக்கு விட்டால் ரூ.5000 வரை கிடைக்கும் என்று அவரிடம் சொன்னேன். மெட்ரோ ரெயிலால் ஆட்டோவில் பயணிப்பவர்கள் குறைந்து பிழைப்புக்கு கஷ்டமாக இருக்கிறது என்றார்.

அப்படி அவர் சொன்னபோதும் முகத்தில் சிரிப்பு தெரிந்தது. கஷ்டத்திலும் மகிழ்ச்சியாக அவர் இருந்ததை பார்க்க ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.”

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.