சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்

சமூக விரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் ரஜினிகாந்த் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஏற்பட்டு உள்ளன. #Rajinikanth
சென்னை

தூத்துக்குடியில்  துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களைச் சந்தித்து  ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.பின்னர் அங்கு இருந்து சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்திலும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 'தூத்துக்குடி கலவரத்தில் சமூக விரோதிகள் தான் உள்ளே புகுந்து போலீசை தாக்கினார்கள் என்றும், போலீசை தாக்குவதை நான் ஒரு போது ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும்' மீண்டும் அதே கருத்தை பதிவு செய்தார்.

ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகள் ரஜினிகாந்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்தனர். தமிழகத்தின் சில இடங்களில் போராட்டமும் நடந்தது.

இது குறித்து காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜோதிமணி தனது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:-

போராட்டத்தால் ஒரு ஸ்டெர்லைட் மூடப்பட்டு நாடு சுடுகாடாகிவிடும் என்றால் கரூர், திருப்பூர் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் நகரங்கள் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, அரசின் அலட்சியத்தால் சுடுகாடாகி வருகிறதே இது பற்றியெல்லாம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா ரஜினி?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிஜேபியும், இப்போது ரஜினியும் ஒன்றுபோல ' சமூக விரோதிகள்' பற்றிப் பேசுகிறார்கள். தெரியுமென்றால் அவர்களை அடையாளம் காட்டவேண்டியது தானே? போராட்டத்தை எதற்கு கொச்சைப்படுத்த வேண்டும்? படுகொலை செய்யப்பட்ட 13 பேரும் 17 வயது மாணவி உட்பட சமூக விரோதிகளா?

போராட்டத்தால் ஒரு சமூகம் சுடுகாடாகுமென்றால் பிறகு எதற்காக திரைப்படங்களில் போர்க்கோலம் போடுகிறீர்கள்? புரட்சி பற்றிப் பேசுகிறீர்கள்? இந்திய சுதந்திரப் போராட்டம் 300 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதனால் தான் சுடுகாடாகிவிடாமல் இந்த மண் இன்னும் உயிர்த்திருக்கிறது.

அப்பொழுதும் உங்களைப் போன்ற அதிகாரத்தின் ஏவலாள்கள் உங்கள் குருநாதர்கள் இதேபோல் தான் பேசிவந்தார்கள். ஏன் சுதந்திரப்போராளிகளை காட்டிக் கூட கொடுத்தார்கள். ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அடிமை தேசத்தில் போராளிகள் உயிர்த்தெழுந்த வரலாறு நம்முடையது.

சுதந்திர மண்ணில் மக்களை அடிமைகளாக இருக்கச் சொல்லாதீர்கள். அதுதான் ஒரு தேசத்தை சுடுகாடாக்கிவிடும். போராட்டங்கள் அல்ல.” இவ்வாறு அவர் ரஜினியை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குனர்  பா.ரஞ்சித் கூறியதாவது:-

 “அது அவருடைய கருத்து. போராட்டத்தில் தான் நான் இருக்கிறேன். போராட்டத்தின் மூலமாகத்தான் இங்கிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரஜினி சாரும் ‘போராட்டமே கூடாது’ எனச் சொல்லவில்லை. காலையில் அவரிடம் பேசினேன். ‘போராட்டமே வேண்டாம் என்று நான் பேசவில்லை. ஆனால், போராட்டத்தில் இந்த மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது’ என்ற வருத்தத்தை என்னிடம் தெரிவித்தார். போராட்டமே கூடாது என்றால், நான் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெறமுடியும். நிச்சயமாகப் போராடுவோம்” என்று தெரிவித்தார்.

நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். "

இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா.. இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்" என சித்தார்த் தெரிவித்துள்ளார்.

Next they will tell us anti social elements polluted #Thoothukudi all these years. — Siddharth (@Actor_Siddharth) 30 May 2018

தொடர்புடைய செய்திகள்