சினிமா செய்திகள்
‘காலா’ திரைப்படம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
புதுடெல்லி, ‘காலா’ திரைப்படம் தொடர்பாக மும்பை கிழக்கு சியான் பகுதியில் வசிக்கும் ஜவகர் நாடார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் டாக்டர் சையத் எஜாஸ் அப்பாஸ் நக்வி என்பவர் மூலம் ரஜினிகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.அதில், ‘காலா’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரவியம் நாடாரின் நற்பெயருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இழுக்கு ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது என்றும், எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 36 மணி நேரத்துக்குள் இதுவரை ‘காலா’ படம் மற்றும் அதன் கதை குறித்து நீங்கள் பொதுவில் கூறி வந்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து என் கட்சிக்காரரின் குடும்பத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும், இல்லையேல் கிரிமினல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.இந்த நோட்டீசின் பிரதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் மற்றும் தணிக்கை குழுவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.