கர்நாடகாவில் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை

கர்நாடகாவில் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-03 23:30 GMT

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை வருகிற 7-ந்தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே காலா படத்தை அங்கு 250-க்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டு ரூ.20 கோடிவரை வசூல் ஈட்ட திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் காலா படத்துக்கு கர்நாடகாவில் திடீரென்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்தை கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக கன்னட அமைப்புகளும் திரைப்பட வர்த்தக சபையும் அறிவித்து உள்ளன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடத்திய சமரச பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை. இதனால் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கமல்ஹாசன் படத்துக்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை தலைவர் கோவிந்து கூறும்போது, “ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை தவிர மற்ற படங்களை கர்நாடகாவில் திரையிட எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார். இதனால் விரைவில் திரைக்கு வர உள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தையும் அங்கு திரையிட முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

இந்த படம் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. நாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். கமல்ஹாசனே கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார். தணிக்கை குழுவினர் படத்துக்கு யூஏ சான்று அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி படத்தை திரைக்கு கொண்டு வர பரிசீலிக்கின்றனர். இந்த நிலையில் கர்நாடாகத்தில் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதித்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்