சினிமா செய்திகள்
ஜேம்ஸ் பாண்ட் பட முதல் கதாநாயகி மரணம்

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டாக்டர் நோ’ 1962-ம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தில் சீன் கேனரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்தார். கதாநாயகியாக யுனிஸ் கேய்ஷன் நடித்தார். இதில் யுனிஸ் கேய்ஷன் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.

படத்தில் இடம்பெற்ற ‘பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்..’ என்ற புகழ் பெற்ற வசனத்தை சீன் கேனரி சொல்வதற்கும் இவரது கதாபாத்திரமே காரணமாக அமைந்தது. கதையில் ஒரு காட்சியில் கதாநாயகனும் கதாநாயகியும் சந்திக்கும்போது சீன் கேனரி, “உங்கள் தைரியத்தை மதிக்கிறேன் மிஸ்” என்பார். அதற்கு பதிலாக ‘டிரெஞ்ச்.. சில்வியா டிரெஞ்ச்..’ என்று தனது கதாபாத்திரத்தின் பெயரை யுனிஸ் கேய்ஷன் நிறுத்தி சொல்வார்.

உடனே சீன் கேனரியும், ‘பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்’ என்று தனது கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி தன்னை அவரிடம் அறிமுகம் செய்வார். அதன்பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இது பிரபல வசனமாக மாறிப்போனது. ‘பிரம் ரஷ்யா வித் லவ்’ என்ற இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் யுனிஸ் கேய்ஷனே கதாநாயகியாக நடித்தார்.

லண்டனில் வசித்து வந்த யுனிஸ் கேய்ஷன் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. யுனிஸ் கேய்ஷன் உடலுக்கு ஜேம்ஸ் பாண்ட் பட தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜி வில்சன், பார்பரா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.