ரஜினிகாந்தின் 2.0 மீண்டும் தள்ளிவைப்பு? ரசிகர்கள் ஏமாற்றம்

ரஜினிகாந்தின் ‘காலா’ படம் கடந்த 7-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக வெளியாகும் என்று எதிர்பார்த்த ‘2.0’ இன்னும் வரவில்லை.

Update: 2018-06-11 02:44 GMT
இந்த படத்தை ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுத்தனர். இந்தியாவில் வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய செலவில் வந்தது இல்லை. 2015 டிசம்பர் மாதம் பட வேலைகளை துவக்கினர்.

ஒரு வருடத்துக்கு முன்பே முழு படமும் முடிந்து விட்டது. கடந்த டிசம்பரில் துபாயில் ஆடம்பரமாக பாடல் வெளியீட்டு விழாவையும் நடத்தி முடித்தனர். ஏப்ரல் மாதமே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டும் நடக்கவில்லை. அதன் பிறகு கடந்த மாதம் வரும் என்று எதிர்பார்த்தனர். அப்போதும் வராமல் படம் தள்ளிப்போனதால் காலாவை ரிலீஸ் செய்து விட்டனர்.

இப்போது 2.0 எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 2.0 படத்துக்கு கிராபிக்ஸ்தான் முக்கியம். பாகுபலி படத்துக்கு கிராபிக்ஸ் பெரிய பலமாக இருந்தது. எனவே 2.0 படத்துக்கும் ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் ஷங்கர் உறுதியாக இருக்கிறார்.

வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் இந்த பணிகள் நடக்கின்றன. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை. இதுவே படம் தாமதத்துக்கு காரணம் என்கின்றனர். ஆகஸ்டு 15-ந்தேதி 2.0 படத்தை ரிலீஸ் செய்து விட முடிவு செய்தனர். அன்று எப்படியாவது படம் வந்து விடும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் மீண்டும் படத்தை தள்ளி வைத்து அடுத்த வருடம் ஏதேனும் ஒரு பண்டிகை நாளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரிலீஸ் தேதியை இந்த வருடம் இறுதியில் அறிவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 தயாராகி உள்ளது. அக்‌ஷய்குமார் வில்லனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்