சினிமா செய்திகள்
பாலியல் சர்ச்சை கதை : ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை

மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான ஷகிலாவுக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.
ஒரு காலத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்களே ஷகிலா படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அவர்கள் படங்களை வசூலில் ஷகிலாவின் படங்கள் பின்னுக்கு தள்ளின.

ஷகிலா படங்களுக்கு தியேட்டர்கள் நிரம்பி வழிந்ததால் பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த சம்பவங்களும் நடந்தன. ஷகிலாவின் ஆபாச படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்களும் நடந்தன. பின்னர் அவர் சென்னைக்கு வந்து தமிழில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் தயாராகி உள்ள ‘சீலாவதி’ என்ற திகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தை ஸ்ரீராம் தாசரி டைரக்டு செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கேரளாவில் நடந்த சில பாலியல் குற்ற உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சீலாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்து திடீர் தடை விதித்து உள்ளது. படத்தின் கதைக்கும், தலைப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தணிக்கை குழுவை ஷகிலா கண்டித்துள்ளார். “படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழு தடை விதித்து இருக்கிறது. இந்த படத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்” என்று அவர் கூறினார்.