சினிமா செய்திகள்
சவாலான வேடங்களை விரும்பும் சமந்தா

சமந்தா திருமணத்துக்கு பிறகும் சுறுசுறுப்பாக நடிக்கிறார். அவரது நடிப்பில் இரும்புத்திரை, நடிகையர் திலகம், தெலுங்கில் ரங்கஸ்தலம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன.
சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்கள் கைவசம் இப்போது  உள்ளன. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘யுடர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளிலும் நடிக்கிறார்.

சமந்தா விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து சொல்கிறார்:-

“திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். படவாய்ப்புகளும் வருகிறது. முன்பு மாதிரி இல்லாமல் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். அதுமாதிரியான கதைகளையும் தேடுகிறேன். வித்தியாசமான வேடத்தில் நடிப்பதுதான் எனது லட்சியமும்கூட. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நிறைய வருகின்றன.

கதாநாயகனை முன்னிலைப்படுத்தும் படங்களிலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடங்கள் உள்ளன. நல்ல கதைகள் அமைந்தால்தான் திறமையை நிரூபிக்க முடியும். டைரக்டர்களும் நம்பிக்கை வைத்து அதுமாதிரியான கதைகளுடன் வருவார்கள். இதுவரை நான் நடித்துள்ள கதாபாத்திரங்கள் என்னால் எந்த வேடத்தையும் செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளன. அதை வைத்துத்தான் பட வாய்ப்புகளும் வருகின்றன.

இவ்வாறு சமந்தா கூறினார்.