சினிமா செய்திகள்
தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் டைரக்டர் பிரியதர்ஷன் மகள்

தென்னிந்திய சினிமாவில், பிரபல டைரக்டராக இருப்பவர், பிரியதர்ஷன். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து, பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.
பிரியதர்ஷன் டைரக்‌ஷனில் சமீபத்தில்  ‘நிமிர்’ என்ற படம் வெளியானது. அதில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

பிரியதர்ஷனும், நடிகை லிசியும் காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகளாக இருந்தார்கள். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இவர்களின் மகள் கல்யாணி. தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் மகன் அகில் நடித்த ‘ஹலோ’ (தெலுங்கு) படத்தின் மூலம் கல்யாணி கதாநாயகியாக திரையுலகுக்கு அறிமுகமானார். சர்வானந்த் ஜோடியாகவும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

மூன்றாவதாக மேலும் ஒரு தெலுங்கு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில், சாய்தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். அடுத்து ஒரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார். மேலும் பல தமிழ் பட வாய்ப்புகளும் இவருக்கு வந்துள்ளன.