சினிமா செய்திகள்
தன்னைப்பற்றி வதந்திகள் நடிகை சிம்ரன் விளக்கம்

நடிகை சிம்ரன் 1990–களில் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்தார்.
 திருமணத்துக்கு பிறகு சிம்ரனுக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. அக்காள், அண்ணி வேடங்களே கொடுத்தார்கள். சில படங்களில் கவுரவ தோற்றங்களில் வந்தார். டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

தற்போது அரவிந்தசாமியுடன் ‘வணங்காமுடி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விக்ரமின் துருவ நட்சத்திரம், சிவகார்த்திகேயனின் சீமராஜா படங்களில் நடித்து வருகிறார். இனிமேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்து இருப்பதாக சிம்ரன் திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்ரன் கலந்து கொள்ள இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சிம்ரன், ‘‘நான் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போவதாக வெளிவரும் தகவல்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் ‘போட்டாஷாப்’ வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர். இப்போது எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்கவில்லை. எதிர்காலத்திலும் பங்கேற்கப் போவதில்லை.’’ என்று கூறியுள்ளார்.