“சினிமாவில் தான் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது” நடிகை ரித்திகா பேட்டி

“சினிமாவில் தான் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது” என்று நடிகை ரித்திகா கூறினார்.

Update: 2018-06-20 00:02 GMT
சென்னை,

‘வழக்கு எண் 18/9’, என்ற படத்தில் வில்லத்தனமான அம்மா வேடத்தில் நடித்தவர், ரித்திகா. தொடர்ந்து ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘தெய்வதிருமகள்’ உள்பட 15 படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து திரைக்கு வர இருக்கும் ‘டிக்...டிக்...டிக்...’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று மாலை அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் துன்புறுத்தல்

‘டிக்...டிக்...டிக்...’ படத்தில் எனக்கு ராணுவ கர்னல் வேடம். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இது. ஒரு விண்கல் பூமியை நோக்கி அதிவேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. 2 நாட்களில் அது பூமியை வந்தடையும். அப்படி வந்தால் பூமி முழுவதும் அழியும் நிலை ஏற்படும். எனவே அந்த விண்கல்லை தடுத்து நிறுத்துவதற்கு, விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.

இப்படி ஒரு அறிவியல்பூர்வமான இந்த கதையில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ரித்திகா கூறினார்.

அவரிடம், ‘சமீபகாலமாக திரைப்படத்துறையில் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே... ஆந்திராவில் நடிகை ஸ்ரீரெட்டி புகாருக்கு மேல் புகார் கூறிக்கொண்டிருக்கிறாரே...’, என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரித்திகா பதிலளித்து கூறியதாவது:-

பாதுகாப்பு இருக்கிறது

பாலியல் துன்புறுத்தல் எங்கே இல்லை... எல்லா துறையிலும் இருக்கிறது. சினிமாவில் குறைவாகவே இருக்கிறது. கற்பழிப்பும், கடத்தலும் மற்ற துறைகளில் நிறைய இருந்து வருகிறது. சினிமா நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து இரவு 10 மணிக்கு மேல் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியும். சினிமாவில் தான் பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது.

நள்ளிரவில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் ஒரு நடிகைக்கு ஏதாவது பிரச்சினை என்றால், கதாநாயகனில் இருந்து தயாரிப்பு நிர்வாகி வரை உடனே உதவ முன்வருவார்கள். எனவே சினிமாவில் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பு இருப்பதாகவே உணருகிறேன். சினிமாவில் நடிக்க பிடிக்கவில்லை என்றால் உடனே ஒதுங்கிவிட வேண்டும். அதைவிடுத்து மேலாடை இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது.

இவ்வாறு நடிகை ரித்திகா கூறினார். 

மேலும் செய்திகள்