சினிமா செய்திகள்
முதல் படத்திலே விருது பெற்ற கல்யாணி

முப்பது வருட திரை உலக வாழ்க்கையில் 90-க்கும் மேற்பட்ட சினிமாக்களை இயக்கி யிருக்கும் டைரக்டர் பிரியதர்ஷனின் வீட்டு அலமாரிகளை எல்லாம் அவருக்கு கிடைத்த விருதுகள் நிறைத்துக்கொண்டிருக்கின்றன.
முப்பது வருட திரை உலக வாழ்க்கையில் 90-க்கும் மேற்பட்ட சினிமாக்களை இயக்கி யிருக்கும் டைரக்டர் பிரியதர்ஷனின் வீட்டு அலமாரிகளை எல்லாம் அவருக்கு கிடைத்த விருதுகள் நிறைத்துக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் கொடுக்காத மகிழ்ச்சியை, மகள் கல்யாணியின் வெற்றி அவருக்கு கொடுத்திருக்கிறது. கல்யாணி அறிமுகமான முதல் படத்திலே விருது பெற்றிருக்கிறார். தெலுங்கு படத்தில் நடித்த அவருக்கு சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருது கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மகள், பிரியதர்ஷனிடம் சொல்ல, அந்த இன்ப அதிர்ச்சி அன்று இரவு முழுவதும் அவரை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

பிரியதர்ஷன்- நடிகை லிசியின் மகளான கல்யாணி அமெரிக்காவில் ஆர்க்கிடெக்சர் துறையில் பட்டம் பெற்றவர். பின்பு பிரபல சினிமா ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் இணைந்து பணியாற்றினார். கிருஷ்-3 என்ற இந்தி படத்தில் அவர் கலை வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன. திடீரென்று ஒரு நாள் அவர் தந்தையிடம், தான் நடிக்கப்போவதாக கூறியதை அவரால் நம்ப முடியவில்லை. அதுவரை நடிப்பு பற்றி வாய்திறக்காத கல்யாணி அவ்வாறு கூறியதும், ‘எதற்கும் நன்றாக யோசித்து முடிவெடு’ என்று தாயும், தந்தையும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அந்த வேகத்திலே கல்யாணி கதாநாயகியாகிவிட்டார். நாகார்ஜூனா தயாரித்து அவரது மகன் அகில் அக்கினேனி கதாநாயகனாக நடித்த ‘ஹலோ’ என்ற தெலுங்கு படத்தில் அரங்கேறிவிட்டார். முதல் படமே அவருக்கு சிறந்த அறிமுக நாயகிக்கான விருதினை பெற்றுக்கொடுத்துவிட்டது. அந்த விருதினை அம்மா லிசியின் கையாலே பெற்றிருக்கிறார். கல்யாணியோடு சேர்ந்து இதே காலகட்டத்தில் ெதலுங்கில் ஐந்து நாயகிகள் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருதினை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக கல்யாணி வலம் வருகிறார்.

இந்த வெற்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. வெற்றிகரமான படங்களை இயக்கி புகழின் உச்சிக்கு சென்ற பிரியதர்ஷன் 1990-ம் ஆண்டில் திடீர் வீழ்ச்சியை சந்தித்தார். அவரது வெற்றிக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டதாக பலரும் கருதிக்கொண்டிருந்தார்கள். அதை தொடர்ந்து சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தனது இருப்பிடத்தையும் அவர் மாற்றினார். அப்போது வந்தனம் என்ற மலையாள சினிமாவை பார்த்துவிட்டு, அதை தெலுங்கில் இயக்கவேண்டும் என்று பிரியதர்ஷனை, அன்று புதுமுகமாக இருந்த நாகார்ஜூனா அணுகினார். அந்த படத்தை இயக்கியதன் மூலம் திரைஉலகில் தனது அடுத்த இன்னிங்சை தொடங்கினார், பிரியதர்ஷன். நாகார்ஜூனா அவருக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் மூலம், பிரியதர்ஷனுக்கு இந்தி திரை உலக கதவுகளும் திறந்தன. கடுமையான உழைப்பின் மூலம் மீண்டும் பிரியதர்ஷன் புகழ் நிலைக்கு வந்துவிட்டார். அதே நாகார்ஜூனா 27 வருடங்களுக்கு பிறகு அவரது மகளையும் திரையில் அரங்கேற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் கல்யாணியிடம் சில கேள்விகள்: நடிகையாகவேண்டாம் என்று பெற்றோர் உங்களிடம் சொன்னார்களா?

ஒருபோதும் அவர்கள் அவ்வாறு சொன்னதில்லை. எங்கள் வாழ்க்கையும், உயிரும் சினிமாதான். நான் இப்படி ஒரு முடிவை எடுப்பேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நீ நினைப்பதுபோல் நடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்று அப்பா சொன்னார். நான் ஒரு கட்டிடக்கலை நிபுணராக என் வாழ்க்கையை நடத்துவேன் என்று அவர் நினைத்திருக்கலாம். நான் ஆர்ட் டைரக்டரானபோதுதான், எனக்கு நடிப்புதான் சிறந்தது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.

சினிமாவில் உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு மோகன்லால் என்ன சொன்னார்?

குறிப்பிடத்தக்க விதத்தில் அவர் எதுவும் சொல்லவில்லை. லால் அங்கிள் என்னை கட்டிப்பிடித்தார். அதில் நிறைய அர்த்தம் இருந்தது.

சினிமா வெளியானதற்கு பிந்தைய சூழ்நிலை எப்படி இருந்தது?

நடிக்கத் தொடங்கியபோது நான் எதை பற்றியும் யோசிக்கவில்லை. ஆனால் சினிமாவை பார்த்துவிட்டு எல்லோரும் வெளிப்படுத்திய அன்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. தெலுங்கு தெரியாதவர்கள்கூட சப்டைட்டில் மூலம் கதையை புரிந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஹலோ படத்தில் என் கதாபாத்திரமும் ரொம்ப அன்பு நிறைந்ததுதான்.

இந்தி சினிமாவுக்கு செல்லும் வாய்ப்பும் வந்திருக்குமே..?

என் உலகம் இதுதான். இங்கிருந்து செல்ல எனக்கு விருப்பம் இல்லை. இந்திக்கு சென்றால் நான் தனிமைப்பட்டுவிடுவேன். இந்தி ஒரு தனி உலகம். அது எனக்கு சரிப்படும் என்று நான் நினைக்கவில்லை. நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்.

அம்மா லிசியிடம் இருந்து விருது பெற்ற அனுபவம் எப்படி இருந்தது?

பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல வருடங்களாக அம்மா விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்த முறை அம்மா என் அருகில் இருந்தார். அவர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். விருதுக்கு என் பெயர் அழைக்கப்பட்டபோதும், அம்மா என் அருகில் நின்றபோதும் என்ன நடந்தது என்ற நினைவு எனக்கு இல்லை. அவ்வளவுக்கு சிலிர்த்துப்போய்விட்டேன். அம்மாதான் எனக்கு எல்லாமும்..!

விருது கிடைத்த விஷயத்தை பிரியதர்ஷனுக்கு சொன்னது நீங்கள்தானே?

ஆமாம். அதை கேட்டுவிட்டு அப்பா என்ன சொன்னார் என்பது எனக்கு சரியாக கேட்கவில்லை. நான் நடிக்கத் தொடங்கும்போது, பிரியதர்ஷன் என்ற புகழ்பெற்ற பெயருக்கு களங்கம் ஏற் படுத்திவிடுவோனோ என்று உள்ள படியே பயந்தேன். என்னால் அவர் தலைநிமிர்ந்து நிற்கும் நாள் வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவே என் பிரார்த்தனையாகவும் இருந்தது. அந்த என் ஆசை சிறிய அளவில் நிறைவேறியுள்ளது என்று நினைக்கிறேன். என்னை பலர் பாராட்டினார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த தகவலை அப்பாதான் சொல்லியிருக்கிறார். மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழிலும் சில வாய்ப்புகள் வந்திருக்கிறது. அப்பா, உனக்கான சினிமா உன்னைத்தேடி வரும் என்று கூறியிருக்கிறார். அப்பாவின் இயக்கத்தில் நான் நடிக்கவேண்டும் என்று விரும்பும்போது அதுவும் நடக்கும்.