சினிமா செய்திகள்
ரஜ்னீஷ் சாமியார் வாழ்க்கை படத்தில், அமீர்கான்

ரஜ்னீஷ் சாமியார் வாழ்க்கை படத்தில், அமீர்கான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல ஆன்மிக தலைவர் ஓஷோ என்ற ரஜ்னீஷ் சாமியாரின் வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜ்னீஷ் சாமியார் மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்து புதிய ஆன்மீக தத்துவ கோட்பாடுகளால் உலகம் முழுவதும் பிரபலமானார். மும்பையில் ஆசிரமம் நடத்தினார். தரிசு நிலமான ஒரேகான் பகுதியில் ரஜ்னீஷ் புரம் என்ற நகரை உருவாக்கினார்.

அங்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து வசித்தனர். அமெரிக்காவிலும் ரஜ்னீஷ் புரம் உருவானது. அங்கு சட்டவிரோத செயல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ரஜ்னீஷ் சாமியாரை கைது செய்தனர். பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆன்மிகத்தை பரப்பினார். சில நாடுகள் அவருக்கு அனுமதி மறுத்தன. 1990-ல் மரணம் அடைந்தார்.

ரஜ்னீஷ் சாமியாரின் வாழ்க்கையை படமாக எடுக்க பிரபல இந்தி இயக்குனர் கரன் ஜோகர் முடிவு செய்துள்ளார். சினிமா படமாக எடுப்பதா? அல்லது வெப் தொடராக தயாரித்து வெளியிடுவதா என்று அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜ்னீஷ் சாமியார் வேடத்தில் நடிக்க அமீர்கானை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அமீர்கான் தற்போது இந்தியில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அந்த படத்துக்கு முன்பாக ரஜ்னீஷ் வாழ்க்கை கதை படத்தில் நடிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினீஷ் சாமியார் உதவியாளர் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை அலியாபட் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.