சினிமா செய்திகள்
வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்ததாக நடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார்

வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்ததாக நடிகை கிம்சர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை கிம்சர்மா. தெலுங்கில் ராம்சரண் ஜோடியாக ‘மகதீரா’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்தது. கிம்சர்மாவுக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

இப்போது கிம்சர்மாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. மும்பையில் வசித்து வருகிறார். இவர் தனது வேலைக்கார பெண்ணை அடித்து சித்ரவதை செய்ததாக சர்ச்சையில் சிக்கி உள்ளார். கிம்சர்மா வீட்டில் எஸ்தர் என்ற பெண் வேலை செய்து வந்தார். துணி துவைக்கும்போது வெள்ளை உடைகளையும் வண்ண உடைகளையும் தனித்தனியாக துவைக்காததால் விலைஉயர்ந்த தனது ஆடை வீணாகி விட்டதாக வேலைக்காரியை கிம்சர்மா அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மும்பை போலீசில் எஸ்தர் புகார் அளித்தார். அந்த மனுவில், “உடைகளை சரியாக துவைக்கவில்லை என்று கிம்சர்மா என்னை அடித்தார். வீட்டைவிட்டு வெளியே தள்ளினார். எனக்கு சம்பளமும் பாக்கி வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார். கிம்சர்மா மீது போலீசார் 323, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த புகாருக்கு பதில் அளித்துள்ள கிம்சர்மா, “வீட்டு வேலைக்காரியை நான் அடிக்கவில்லை. துணிதுவைத்தபோது எனது ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள உடையை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாக்கி விட்டார். அதனால் அவரை வெளியே போகச் சொன்னேன். வேலைக்காரியை நான் அடிக்கவில்லை” என்றார்.