சினிமா செய்திகள்
டிரெய்லரை வெளியிட்டனர்: ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் ராஜசேகர ரெட்டியாக நடிகர் மம்முட்டி நடித்துள்ளார்.
பிரபலமானவர்கள் வாழ்க்கை கதை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் வந்த நடிகையர் திலகம் படம் வெற்றி பெற்றது. இந்தி நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான சஞ்சு படம் ரூ.200 கோடியை தாண்டி வசூல் சாதனை நிகழ்த்தியது.

மறைந்த ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் தற்போது தெலுங்கானா முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ் ஆகியோர் வாழ்க்கை படமாகி வருகிறது. ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை படத்துக்கு ‘யாத்ரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். 1999-ல் அம்பேத்கர் வேடத்திலும் மம்முட்டி நடித்து தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘யாத்ரா’ படத்தில் ராஜசேகர ரெட்டியின் பிரபலமான 1475 கிலோ மீட்டர் தூர பாத யாத்திரை முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது. இரண்டு முறை ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். யாத்ரா படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

வீட்டில் நாற்காலியில் இருந்து எழுந்து துண்டை தோளில் போட்டுக்கொண்டு மம்முட்டி நடந்து வந்து மக்களை பார்த்து கையசைப்பதுபோல் டிரெய்லரில் காட்சி இருந்தது. அதை பார்த்தவர்கள் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.