சினிமா செய்திகள்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய டைரக்டர் மீது மேலும் ஒரு நடிகை புகார்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய டைரக்டர் மீது மேலும் ஒரு நடிகை புகார்
மலையாள நடிகை நிஷா சாரங், டி.வி. டைரக்டர் உன்னிகிருஷ்ணன் மீது செக்ஸ் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். படப்பிடிப்பில் நீண்ட நாட்களாகவே அவர் தனது ஆசைக்கு இணங்கும்படி தொல்லை கொடுத்து படுக்கைக்கு அழைத்தார் என்றும், அதற்கு உடன்படாததால் கேவலமாக திட்டினார் என்றும் நிஷா சாரங் கூறினார்.

படப்பிடிப்புக்கு உன்னிகிருஷ்ணன் குடித்துவிட்டு போதையிலே வருவார் என்றும் தெரிவித்தார். நடித்து சம்பாதிக்கும் பணத்தில்தான் எனது குடும்பம் நடக்கிறது. அதனால்தான் அவரது தொல்லைகளை பொறுத்துக்கொண்டேன் என்றும் நிஷா சாரங் சொன்னார்.

கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து உன்னிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் மலையாள நடிகையும், நடன கலைஞருமான ரச்சணா நாராயணன் குட்டியும் உன்னிகிருஷ்ணனால் பாதிக்கப்பட்டேன் என்று புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“டைரக்டர் உன்னிகிருஷ்ணன் திமிர் பிடித்தவர். யாரையும் மதிப்பது இல்லை. கேவலமாக பேசுவார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு அவர் இயக்கிய டி.வி. தொடரில்தான் நடித்தேன். என்னை அடிக்கடி வேதனைப்படுத்தினார். அவர் தொல்லைகளை தாங்க முடியவில்லை. அதன்பிறகு எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. என்னை அழைத்து இனிமேல் தொடரில் நடிக்க வேண்டாம். படப்பிடிப்புக்கு வரக்கூடாது என்று கூறிவிட்டார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. நிஷா சாரங்குக்கு அதே இயக்குனர் செக்ஸ் தொல்லை கொடுத்து இருப்பதை அறிந்து அதிர்ந்தேன். நிஷா சாரங்குக்கு போன் செய்து உங்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறினேன். மலையாள நடிகர் சங்கமும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு ரச்சணா நாராயணன் குட்டி கூறினார்.