சினிமா செய்திகள்
ரஜினியுடன் பகத் பாசில் நடிப்பதாக வெளிவந்த தகவல் பொய்யானது: கார்த்திக் சுப்புராஜ்

நடிகர் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் காலா படத்திற்கு பின்னர், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்று இருந்தார். அவருடன் படப்பிடிப்பு குழுவினரும் சென்று இருந்தனர்.

அங்கு சினிமா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அவர் கடந்த 10-ந் தேதி வந்தடைந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் நிலையில், ரஜினியுடன் மலையாள நடிகர் பகத் பாசில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே இத்தகவலை மறுத்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ”படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் பகத் பாசில் இணையவுள்ளார் என்பது பொய்யான தகவலாகும். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார். 

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.