சினிமா செய்திகள்
மோகன்லாலை எதிர்ப்பதால் பட வாய்ப்புகளை தடுப்பதாக ரம்யா நம்பீசன் புகார்

தமிழில் ராமன் தேடிய சீதை, பீட்சா, சேதுபதி உள்பட பல படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தமிழில் ராமன் தேடிய சீதை, பீட்சா, சேதுபதி உள்பட பல படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது 2 மலையாள படங்கள் கைவசம் உள்ளன. கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய திலீப்பை மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்தை கடுமையாக விமர்சித்தார்.

இதை கண்டித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரம்யா நம்பீசனை மலையாள பட உலகில் இருந்து ஓரம்கட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள். இது ரம்யா நம்பீசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ரம்யா நம்பீசன் இந்த தகவலை வெளியிட்டார். அவர் பேசும்போது, ‘‘நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர். படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவர் ரம்யா நம்பீசன் என்று அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்’’ என்றார். மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால் அவருக்கு எதிராக செயல்படுவதாக மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது.