சினிமா செய்திகள்
என்.டி.ராமராவ் வேடத்தில் பொருந்திய பாலகிருஷ்ணா

என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படத்தில் என்.டி.ராமராவ் வேடத்தில் நடிக்கும் பாலகிருஷ்ணாவின் தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஆந்திர முதல் மந்திரியாகவும் முன்னணி தெலுங்கு நடிகராகவும் இருந்த மறைந்த என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் என்.டி.ராமராவ் கதாபாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசுவதாரகம் வேடத்துக்கு அதிக சம்பளம் கொடுத்து வித்யாபாலனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.   என்.டி.ராமராவ் ஜோடியாக அதிக படங்களில் நடித்துள்ள சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கிறார்கள். மேலும் சந்திரபாபு நாயுடுவாக ராணாவும் அவரது மனைவி புவனேஸ்வரியாக மஞ்சிமா மோகனும் பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியாக பிரகாஷ்ராஜும் நாகேஷ்வரராவாக சுமந்தும் ராமாநாயுடுவாக வெங்கடேசும் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் வருகிறார்கள். 

இந்த படத்தை கிரிஷ் டைரக்டு செய்கிறார். என்.டி.ராமராவின் திரையுலக அரசியல் வாழ்க்கையை முழுமையாக இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். முதல்–மந்திரியாக இருந்தபோது ஆந்திர மாநில வளர்ச்சிக்காக நிறைவேற்றிய திட்டங்களையும் படத்தில் கொண்டு வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 

ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களில் அதிக பொருட் செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். பாலகிருஷ்ணாவின் என்.டி.ஆர் தோற்றம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் தோற்றத்தை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த பலரும் என்.டி.ராமராவ் போலவே அவர் இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.