சினிமா செய்திகள்
“நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான படத்தில் நடிக்கிறேன்” நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி

சென்னையில் குடியேறிவிட்டதாகவும், தமிழில் தயாராகும் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான படத்தில் நடிப்பதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி கூறினார்.
சென்னை, 

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டியின் டைரி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் படமாகிறது. இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே நடிக்கிறார். அலாவுதீன் இயக்குகிறார். ரவிதேவன், சித்திரைச்செல்வன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரீரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;-

திரையுலகில் படவாய்ப்பு தேடும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். எனக்கு அந்த அனுபவங்கள் ஏற்பட்டதை அம்பலப்படுத்தினேன். நடிகைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை மையப்படுத்தி ‘ரெட்டியின் டைரி’ என்ற படம் தயாராகிறது.

இதில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நல்லவர்களாக நடித்து சினிமாவில் மோசடி பேர்வழிகளாக வலம்வருபவர்களை படத்தில் அம்பலப்படுத்துவோம். மேலும் 2 தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.

ஆந்திராவில் எனக்கு பாதுகாப்பு இல்லை. சிரஞ்சீவி, பவன்கல்யாண், சுரேஷ்பாபு உள்பட 4 குடும்பத்தினர் ஆதிக்கத்தில் தெலுங்கு பட உலகம் இருக்கிறது. எனக்கு நடிக்க தடைபோட்டார்கள். நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் தரவில்லை. தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பிறகு தடையை நீக்கினார்கள்.

ஆனாலும் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. அரசும் உதவவில்லை. எனவே ஆந்திராவைவிட்டு வெளியேறி சென்னையில் குடியேறிவிட்டேன். இங்குள்ளவர்கள் பெண்களை மதிப்பவர்கள். எனக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது சென்னையில் இருப்பவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

நான் பாலியல் புகார் சொன்ன லாரன்ஸ் வாய்ப்பு அளித்தாலும் நடிப்பேன். ‘ரெட்டியின் டைரி’ படத்தில் எனது வாழ்க்கை சம்பந்தமான காட்சிகள் உள்ளனவா?, உண்மை வீடியோ காட்சிகள் இருக்குமா? என்பதை இப்போது சொல்லமுடியாது. ரெட்டியின் டைரி படத்தை நடிகர் சங்கம் தடுக்க நினைத்தால் அது பெரிய குற்றமாகும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனக்கு ரோல்மாடல். அவரது தைரியம் பிடிக்கும். சமூக சேவையில் ஈடுபடுவேன். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு உள்ளது. எனது வாழ்க்கையை சுயசரிதையாகவும் எழுதுவேன். சினிமாவில் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் பட்டியலை தொடர்ந்து வெளியிடுவேன். எனக்கு மிரட்டல்களும் வருகின்றன.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

தயாரிப்பாளர் சித்திரைச்செல்வன் கூறும்போது, “ஸ்ரீரெட்டி வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களும், ரகசிய கேமராவில் படமாக்கப்பட்ட காட்சிகளும் ‘ரெட்டியின் டைரி’ படத்தில் இடம்பெறும்” என்றார்.