சினிமா செய்திகள்
போர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 10 சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் அக்ஷய் குமார் மற்றும் சல்மான் கான்

போர்ப்ஸ் பத்திரிகையின் அதிக சம்பளம் பெறும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் அக்ஷய் குமார் மற்றும் சல்மான் கான் இடம் பெற்று உள்ளனர்.
புதுடெல்லி,டாப் 10 சம்பளம் பெறும் நடிகர்களின் வருடாந்திர பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.  இந்த பட்டியலில் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் சல்மான் கான் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.  இதில் அக்ஷய் குமார் 7வது இடத்தில் உள்ளார்.  அவரது வருட வருவாய் 4.5 கோடி அமெரிக்க டாலர் ஆக உள்ளது.  சல்மான் கான் 3.85 கோடி அமெரிக்க டாலர் வருட வருவாயுடன் 9வது இடத்தில் உள்ளார்.கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 1 முதல் 2018ம் ஆண்டு ஜூன் 1 வரையிலான கால அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் 8வது இடத்தில் இருந்த நடிகர் ஷாருக் கான் இந்த வருட பட்டியலில் இடம் பெறவில்லை.  கடந்த வருடம் போல் நடிகர் அமீர் கான் இந்த வருடமும் பட்டியலில் இல்லை.நடிகர் அக்ஷய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா மற்றும் பேட்மேன் ஆகிய திரைப்படங்கள் மற்றும் 20 விளம்பர படங்களாலும் அவரது வருவாய் உயர்ந்துள்ளது.நடிகர் சல்மான் கானுக்கு டைகர் ஜிந்தா ஹை மற்றும் ரேஸ் 3 ஆகிய படங்கள் மற்றும் விளம்பர படங்களால் வருவாய் உயர்ந்துள்ளது.இந்த பட்டியலில் நடிகர் ஜார்ஜ் குளூனி முதல் இடத்தினை பிடித்துள்ளார்.  இங்கிலாந்து நாட்டின் மதுபான தொழில் அதிபர் டியாஜியோ என்பவர் 100 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து குளூனியிடம் இருந்து காசாமிகாஸ் என்ற நிறுவனத்தினை வாங்கியுள்ளார்.  இந்த வருடம் இவரது படம் எதுவும் வெளியாகாத நிலையில், நிறுவன விற்பனையால் கிடைத்த வருவாயால் இவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.இதேபோன்று டுவைன் ஜான்சன் 12.4 கோடி அமெரிக்க டாலர் வருவாயுடன் 2வது இடத்தில் உள்ளார்.  அவருக்கு ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் ராம்பேஜ் ஆகிய படங்கள் வசூலை ஈட்டி தந்துள்ளன.இந்த பட்டியலில், ராபர்ட் டவுனி ஜூனியர் 3வது இடத்திலும், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் 4வது இடத்திலும், ஜாக்கி சான் 5வது இடத்திலும், வில் ஸ்மித் 6வது இடத்திலும், ஆடம் சாண்ட்லர் 8வது இடத்திலும், கிறிஸ் ஈவான்ஸ் 10வது இடத்திலும் உள்ளனர்.