சினிமா செய்திகள்
சினிமா துறையில் ‘‘நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன’’ பிரியா பவானி சங்கர் புகார்

திரைத் துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையில்  பயன்படுத்திய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த பட்டியலில் தமிழ், நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்களும் இருந்தன. இப்போது தனது வாழ்க்கை கதையை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாக்கி அதில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரும் திரைத்துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக கூறியுள்ளார்.  

இவர் ‘மேயாத மான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் திரைக்கு வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைக்க வந்த பிரியா பவானி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

‘‘சினிமா துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறுக்க முடியாது. திரைப்படத் துறை மட்டுமன்றி எல்லா துறைகளிலுமே பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். அதனை ஏற்பதும் மறுப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லைகளை சந்தித்ததாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒரு தவறை செய்து விட்டு அதை வெளிப்படையாக கூறுவது நல்லது அல்ல.’’

இவ்வாறு பிரியா பவானி சங்கர் கூறினார்.