சிக்கலில் ஜேம்ஸ் பாண்ட் படம் கதாநாயகன் இறக்கும் காட்சிக்கு எதிர்ப்பு

ஜேம்ஸ் பாண்ட் பட இயக்குனர் டேனி பாய்ல் திடீரென்று படத்தில் இருந்து வெளியேறினார்.

Update: 2018-08-30 22:45 GMT
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவற்றில் கதாநாயகர்களாக வருபவர்களை சிறந்த ஆக்‌ஷன் நடிகர்களாக கொண்டாடுகிறார்கள். இயான் பிளமிங்க் நாவலை அடிப்படையாக வைத்து பாண்ட் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. பாண்ட் படங்கள் வசூலிலும் சாதனை படைக்கின்றன. 

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் தயாராகும் 25–வது படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று அறிவித்தனர். முன் தயாரிப்பு வேலைகளும் தொடங்கப்பட்டன. ஏற்கனவே 4 படங்களில் தொடர்ந்து ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரேக் இந்த படத்தில் நடிக்க மறுத்து விலகுவதாக தகவல் வெளியானது. 

அவருக்கு பதிலாக கருப்பினத்தை சேர்ந்த இட்ரிஸ் எல்பா ஜேம்ஸ் பாண்டாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டேனியல் கிரேக் மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார் என்றும், ‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தை இயக்கிய டேனி பாய்ல் டைரக்டு செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் டேனி பாய்ல் திடீரென்று படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த தகவல் ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்திலும் உறுதி செய்யப்பட்டது. 

டேனியல் கிரேக்குக்கு இது கடைசி படம் என்பதால் கிளைமாக்ஸில் அவர் இறந்து விடுவதுபோல் காட்சி வைக்கும்படி கூறப்பட்டதாம். இதற்கு டேனி பாய்ல் ஒப்புக்கொள்ளவில்லை. ஜேம்ஸ் பாண்ட்டை சாகடிப்பது கேலிக்குரியது. இப்படி சிந்திப்பதே தவறானது என்று அவர் கூறிவிட்டு இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறுகின்றனர். 

படப்பிடிப்பை டிசம்பரில் தொடங்கி 2019–ம் ஆண்டு டிசம்பரில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். டேனி பாய்ல் விலகியதால் திட்டமிட்டபடி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்