கபடி விளையாடும் கங்கனாவின் கல்யாண கனவுகள்

அழகுடன் நடிப்புத் திறமையும் கொண்டவர், இ்ந்தி நடிகை கங்கனா ரணாவத். தேசிய விருது பெற்ற இவர், கபடி விளையாட்டு சார்ந்த படத்தில் அபாரமாக நடித்திருக்கிறார்.

Update: 2018-09-09 06:42 GMT
ழகுடன் நடிப்புத் திறமையும் கொண்டவர், இ்ந்தி நடிகை கங்கனா ரணாவத். தேசிய விருது பெற்ற இவர், கபடி விளையாட்டு சார்ந்த படத்தில் அபாரமாக நடித்திருக்கிறார். அதற்கு ஏற்ற உடல்வாகு இருப்பதால், அந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. தனது பட வாழ்க்கை, தான் நடிக்கும் புதிய படங்கள் பற்றி இங்கே பேசுகிறார்...

கபடி சார்ந்த ‘பங்கா’ படத்தில் நடிக்கிறீர்கள். தைரியமாக அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்படி வந்தது?

நம் நாட்டில் பல விளையாட்டுகளைப் போல கபடியும் புறக்கணிக்கப்பட்டுதான் இருக்கிறது. நான் சிறுவயதில் கபடி விளையாடியிருக்கிறேன், ஆனால் அதைத் தொடரவில்லை. இருந்தபோதிலும் கபடி போட்டியை பார்த்து ரசித்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட நான் தவறுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் உடலுக்கு அசுர பலத்தையும், மனதுக்கு தைரியத்தையும் தர சிறந்த விளையாட்டு கபடிதான். எல்லா பெண்களும் இந்த விளையாட்டில் ஈடுபடவேண்டும். அதேநேரம், இந்தப் படம் கபடி பற்றியது மட்டுமல்ல. இப்படத்தின் இயக்குனரான அஸ்வினி ஐயர் திவாரியும், அவரது கணவரும் படத்தின் கதாசிரியருமான நிதேஷும், குடும்பம், குழந்தைகள், உறவுகள், மதிப்பீடுகள், ஒரு ரெயில்வே வேலை என்று பல உற்சாகமூட்டும் விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். இந்த படம் வித்தியாசமானது. இதில் கூறப்படும் குடும்பம் அபூர்வமானது. இது போன்ற கபடி குடும்ப வாழ்க்கையை நான் வாழ்ந்ததில்லை. ஆனால், கனவு உள்ள ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும். எனக்கு உடல்ரீதியாக சவாலாக இருந்த, ஜான்சிராணி பற்றிய ‘மணிகர்ணிகா’ படத்துக்குப் பின் இது சற்று மென்மையான படம். நான் இதில் நடிக்க உடனே தயாராகிவிட்டேன்.

அப்படியானால் ‘மணிகர்ணிகா’ படம் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டதா?

ஆமாம். காலை 8 மணி தொடங்கி, நள்ளிரவு வரை அப்படம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. என்னைப் பொறுத்தவரை அந்தப் படம் ஒரு பெரிய பொறுப்பு நிறைந்ததாக இருந்தது. சிலநேரங்களில் அதன் அழுத்தம் தாங்காமல் நான் உடைந்துபோனதும் உண்டு. ஆனால் அந்த படத்திற்காக எனக்கு அமைந்தது ஓர் அற்புதமான டீம். அதுதான் எனக்கு ஆதரவாக இருந்தது.

நீங்கள் பேஷன் உலகிலும் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்று நினைத்தீர்களா?

ஆரம்பத்தில் எனக்கு பேஷன் உலகத்தை பற்றி பெரிதாக நம்பிக்கை ஒன்றும் இல்லை. ஆனால் எந்த துறையில் நான் ஈடுபட்டாலும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஏதோ ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. நான் ஓர் அறிவியல் துறை மாணவி, கடுமையாக உழைப்பவள். அப்போதெல்லாம் இரவில் கண்விழிக்கும்போது கூட ஹைஹீல்ஸ் அணிந்துகொண்டு, டி.வி.யில் மாடல்கள் நடப்பது போல் நடந்து பார்ப்பேன். நம்மாலும் ஒரு நாள் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் உழைத்துக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில், ‘சூப்பர் மாடலாகவே’ ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு எந்த மாடலிங் பின்னணியும் இல்லை என்பதால், அந்தப் படத்துக்காக நான் நிறைய ஒத்திகை பார்த்தேன்.

உங்களின் வளர்ச்சியில் உங்களது குடும்பத்தின் பங்கு பற்றி சொல்லுங்கள்?

எனது குடும்பம் ரொம்பவே உணர்வுப்பூர்வமானது, என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார்கள். நான் நடிகையாக வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எனது கனவு என்னை மும்பைக்கு கொண்டு வந்து சேர்த்தது. அதற்கு முன்பு நான் என் குடும்பத்தினரைச் சார்ந்தே இருந்தேன். டீன்ஏஜில் மும்பை வந்துவிட்ட நான், திரைப்படங்கள், பரபரப்பான சமூக வாழ்க்கை, நட்புகள் என்று பிசியாகிவிட்டேன். ஆனால் அவற்றால் எல்லாம், எனக்குள் இருந்த வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை. நான் திரைப்பட வாழ்வில் சரிவைச் சந்தித்தபோது, அந்த வெறுமை வளரவே செய்தது. அப்போது எனது சகோதரி ரங்கோலி, என்னுடன் வந்து இடைவெளியைச் சரிசெய்தாள். நான் 23, 24 வயதில் மீண்டும் என் குடும்பத்துக்குத் திரும்பிப் போனேன். தற்போது நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களது தேவைகள் என்ன என்று நானும் புரிந்துகொண்டிருக்கிறேன். இப்போது நாங்கள், எனது சகோதரியின் மகன் பிருத்விராஜ், புதிதாக விமான பைலட் உரிமம் பெற்றிருக்கிற என் சகோதரன் அக்‌ஷத் என்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

இயக்குநர் அனுராக் பாசுவால் அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் அவரது படத்தில் நடிக்கிறீர்களே?

உண்மையில் நடிப்பென்றால் என்னவென்று எனக்குக் கற்றுக்கொடுத்தவர் அனுராக்தான். எனது சினிமா துறை வளர்ச்சிக்காக நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன். நான் நடிகையாக வளர்ந்த நீண்டகால இடைவெளிக்குப் பின் மீண்டும் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் அவரிடம் இருந்து இன்றும் நான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டிய குழந்தையாகத்தான் இருக்கிறேன். ஒரு படைப்பாளியாக அனுராக் மிகவும் ஸ்பெஷலானவர். அவரது ‘ஜக்கா ஜசூஸ்’ படம் எல்லோரையும் கவராமல் போயிருக்கலாம். ஆனால் அதற்காக அவரைக் குற்றஞ்சாட்ட முடியாது. அவர் பல கதைகள் வைத்திருந்தார். அவற்றில் நான் எதில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் எந்தக் கதையில் நடிக்கச் சொன்னாலும் நான் தயார் என்றும் சொன்னேன். நான் அவருடன் இணைந்து பணியாற்ற இது சரியான நேரம். எங்களின் ‘இமாலி’ படம் ரொம்பச் சிறப்பானதாக இருக்கும்.

மேலும் செய்திகள்