தனி இடம் பிடித்த டொவினோ தாமஸ்

மலையாள சினிமாவில் சமீப காலமாக, ‘எந்தக் கதாபாத்திரத்திலும், தன்னை நுழைத்துக் கொள்ளும் கதாநாயகன்’ என்ற பெயரை எடுத்திருக்கிறார், டொவினோ தாமஸ்.

Update: 2018-09-22 05:01 GMT
மலையாள சினிமா உலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தையும் டொவினோ தாமஸ் பிடித்திருக்கிறார். நடிப்புத் துறைக்கு வந்த 6 ஆண்டு காலங்களில் இப்படியொரு பெயரை சம்பாதிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.

சினிமாத் துறைக்கு வரும் முன்பாக, பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்தவர் டொவினோ தாமஸ். அந்த பிரபலமான விளம்பர படங்கள் தான் அவருக்கு சினிமா வாய்ப்பைப் பெற்றுத் தந்தன. 2012-ம் ஆண்டு சஜீவன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான ‘பிரபுவின்ட மக்கள்’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார், டொவினோ தாமஸ். 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘ஏ.பி.சி.டி’ படம் டொவினோ தாமஸை மக்களுக்கு அடையாளம் காட்டியது. இந்தப் படத்தில் அவர் வில்லன் வேடம் ஏற்று நடித்திருந்தார்.

தொடர்ந்து பிருத்விராஜூடன் ‘செவன்த் டே’, மோகன்லாலுடன் ‘கூதரா’, சீனிவாசன் கதாநாயகனாக நடித்த ‘யூ டூ புரூட்டஸ்’, மீண்டும் பிருத்விராஜூடன் ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘எஸ்ரா’ என பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் இப்படியொரு நடிகர் இருக்கிறான் என்பதை மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் பதிய வைத்துக் கொண்டே இருந்தார்.

2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு மெக்சிகன் அபாரத’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு டொவினோவுக்கு கிடைத்தது. இது ஒரு கல்லூரி அரசியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படமாகும். டாம் எம்மாட்டி இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு டொவினோ தாமசை, நட்சத்திர அந்தஸ்துக்கும் உயர்த்தியது. தொடர்ந்து ‘கோதா’, ‘தரங்கம்’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இதில் ‘கோதா’ திரைப்படம் விளையாட்டை மையமாக வைத்து நகைச்சுவையாகவும் உருவான திரைப்படம். ‘தரங்கம்’ படத்தில் போலீஸ் வேடத்தை ஏற்று நடித்திருந்தார் டொவினோ. இந்தப் படங்களும் கூட வெற்றிப் படங்களாகவே அமைந்தன.

அடுத்ததாக மலையாளத்தின் முன்னணி இயக்குனரான ஆஷிக் அபு இயக்கத்தில் ‘மாயநதி’ என்ற படத்தில் நடித்தார், டொவினோ. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். சிறந்த காதல் காவியமாக உருவான இந்தத் திரைப்படம், அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றதுடன், டொவினோவிற்கு மலையாள கதாநாயகர்களின் நிரந்தர இடத்தை தக்க வைக்கவும் உதவியது. மேலும் இந்த ஆண்டில் வெளியான ‘அபியுட கதா அனுவின்டேயும்’, ‘மரனோடா’ படங்களும் வெற்றிப்படமாகவே அமைந்து, டொவினோ தாமஸின் சினிமா வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது. இதில் ‘அபியுட கதா அனுவின்டேயும்’ என்ற திரைப்படம், தமிழில் ‘அபியும் அனுவும்’ என்ற பெயரில் வெளியானது.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அதாவது கடந்த 7-ந் தேதி டொவினோ தாமஸ் நடித்த ‘தீவண்டி’ திரைப்படம் கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளத்தின் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட பலத்த சேதங்களின் மூலமாகவும் ஒரு மாதத்திற்கும் மேலாக திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் இருந்தது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி தான் மீண்டும் கேரளாவில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதுவும் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ‘தீவண்டி’, பிருத்விராஜ் மற்றும் ரகுமான் நடிப்பில் உருவான ‘ரணம்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது. இதில் ‘ரணம்’ படத்தை விடவும், ‘தீவண்டி’ படமே வசூலைக் குவித்து வருகிறதாம்.

படத்தின் கதாநாயகன் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியாதபடிக்கு, தொடர்ச்சியாக சிகரெட் பிடிப்பவர் என்பதாலேயே ‘தீவண்டி’ என்ற பெயர் சூட்டப்பட்டி ருக்கிறது. சிகரெட் பழக்கத்தின் காரணமாக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு காதலியே திருமணத்தை நிறுத்தி விட்டு விலகும் சூழ்நிலை. அந்த அளவு சிகரெட் பழக்கம் உள்ளவர், ஒரு கட்டத்தில் 20 நாட்களுக்கு சிகரெட்டைத் தொடாமல் இருக்க வேண்டிய இக்கட்டான சூழல் வருகிறது. அதை சமாளித்தாரா என்பது தான் படத்தின் கதை.

தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் கதாபாத்திரத் திலும், அதை விட முடியாமல் அவர் படும் அவஸ்தையிலும் நடிப்பை கொட்டியிருக்கிறார், டொவினோ தாமஸ். படத்தின் கதையும், திரைக்கதை அமைப்பும், அவரது நடிப்புக்கு கைகொடுத்திருக்கிறது. மலையாள சினிமா உலகில் நானும் இருக்கிறேன் என்று தன் படங்கள் மூலமாக வலுவாக உணர்த்தி வந்த டொவினோவை, ‘தீவண்டி’ திரைப்படம் முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் கொண்டு போய் நிறுத்திருப்பதாக மலையாள சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை கடுமையாகச் சொல்லாமல், நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் கருத்து ஆழமாக மனதில் பதியும் படிச் சொன்னது தான் ‘தீவண்டி’ திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

அதற்கு சாட்சியாக இப்போது ‘ஒரு குப்ரசித பையன்’, ‘லுகா’, ‘அண்ட் தி ஆஸ்கார் கோஸ்ட் டூ’, ‘லூசிபர்’, ‘கல்கி’ ஆகிய 5 படங்களை தன் கைவசம் வைத்திருக்கும் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார். இவற்றில் ‘லூசிபர்’ திரைப்படம் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் படமாகும். இதில் டொவினோ தாமஸூக்கு முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மலையாளம் தவிர தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘மாரி-2’ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இதுவரை 23 படங்களில் நடித்திருந்தாலும், டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் ஏழு தான். அதுவும் கடந்த 2 ஆண்டுகளுக்குள் தான் இந்த ஏழு படங்களும் வெளியாகி இருக்கிறது. இந்த குறுகிய இடைவெளியில் ஒரு நடிகன், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் தன்னை உயர்த்திக்கொள்ள கதைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. அதை டொவினோ தாமஸ் சரியாக செய்திருப்பதால் தான் அவரது படங்கள் தொடர்ந்து வெற்றியைப் பெற்று, அவரை இந்த இடத்திற்கு உயர்த்தி விட்டிருக்கிறது.

எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளும் ஒரு நடிகர், எப்படியும் உயர்ந்த இடத்தைப் பிடிப்பான் என்பதற்கு, மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் டொவினோ தாமஸ் ஒரு உதாரணம்.

மேலும் செய்திகள்