தயாரிப்பாளர் சங்க ‘சீல்’ அகற்றப்பட்டது செயலாளர் கதிரேசன் பேட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ அகற்றப்பட்டது.

Update: 2018-12-22 23:00 GMT
சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். இவருக்கு எதிராக ஒரு தரப்பு தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டார்கள்.

சாவியை சங்க பதிவாளர் அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க முயற்சி செய்தார்கள். அதிகாரிகள் அந்த சாவியை வாங்க மறுத்துவிட்டார்கள். மறுநாள் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வந்த அதன் தலைவர் விஷால், பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

‘சீல்’ அகற்றப்பட்டது

பின்னர் விஷால் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்ததற்காகவும், போலீஸ் நடவடிக்கைக்காகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்றுமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவின்படி, சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவகத்தில் வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ நேற்று முன்தினம் அகற்றப்பட்டது. மேலும் தியாகராயநகரில் உள்ள மற்றொரு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீலும் அகற்றப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரரேசன் கூறியதாவது:-

ஒத்துழைப்பு

“தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ ஐகோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது. அதிகாரிகள் கேட்டபடி தஸ்தாவேஜுகளை நாங்கள் கொடுத்து வருகிறோம். அவர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். மீண்டும் யாராவது ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

சங்க அலுவலகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படி நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

இவ்வாறு கதிரேசன் கூறினார்.

மேலும் செய்திகள்