தமிழில் வசூல் குவித்த படங்கள்: இந்தியில் தயாராகும் காஞ்சனா, ராட்சசன்

ஒவ்வொரு மொழியிலும் வெற்றி பெற்ற படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமாக உள்ளது.

Update: 2019-01-24 22:45 GMT
ஒவ்வொரு மொழியிலும் வெற்றி பெற்ற படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமாக உள்ளது. மலையாளத்தில் வசூல் குவித்த ‘பாடிகார்டு’ படம் காவலன் என்ற பெயரிலும், ஹவ் ஓல்டு ஆர் யு படம் 36 வயதினிலே என்ற பெயரிலும் தமிழில் வந்தன. இந்தியில் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் வெளியானது.

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி, தமிழில் வர்மா என்ற பெயரில் தயாராகிறது. இதுபோல் தமிழில் வெற்றிகரமாக ஓடிய படங்களையும் மற்ற மொழிகளில் எடுத்து வெளியிடுகிறார்கள். அந்த வரிசையில் காஞ்சனா, ராட்சசன் ஆகிய 2 படங்களும் தற்போது இந்தியில் ரீமேக் ஆகின்றன.

காஞ்சனா படம் தமிழில் 2011-ல் வெளியானது. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்து இருந்தார். சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் வந்தார். இந்தியில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். திருநங்கை வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. இந்தி பதிப்பையும் லாரன்சே இயக்குகிறார்.

தற்போது காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்துவிட்டு இந்தி காஞ்சனாவின் படப்பிடிப்பை தொடங்குகிறார். ராட்சசன் படம் விஷ்ணுவிஷால்-அமலாபால் ஜோடியாக நடித்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீசானது. ராம்குமார் இயக்கினார். இந்த படத்தை விஷ்ணு விஷாலே இந்தியில் தயாரிக்கிறார். நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.

மேலும் செய்திகள்