சபரிமலைக்கு செல்ல “பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது” - நடிகை பிரியா வாரியர்

சபரிமலைக்கு செல்ல பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-17 22:15 GMT

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இருமுடி கட்டி சென்ற பெண்களை தடுத்து நிறுத்தி எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.

கனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை கண்டித்து கலவரம் வெடித்தது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ‘ஒரு அடார்லவ்’ படத்தில் கண் அசைவு காட்டி பிரபலமான நடிகை பிரியா வாரியரிடம் இதுகுறித்து கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

“சபரிமலைக்கு பெண்கள் செல்ல நினைப்பது அர்த்தமற்றது என்று நினைக்கிறேன். சபரிமலை விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும். சமத்துவத்துக்காக போராட நினைத்தால் அதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

பக்தர் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கிறார். அதுபோல் பெண்களால் இருக்க முடியாது. 41 நாட்களும் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலைக்கு செல்ல அதுதான் தடையாக இருக்கிறது.” இவ்வாறு பிரியா வாரியர் கூறினார்.

மேலும் செய்திகள்