சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ டிஜிட்டலில் வெளியாகிறது

சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகிறது.

Update: 2019-03-27 23:34 GMT

சிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களான கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், பாசமலர் ஆகிய படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தன. இந்த வரிசையில் வசந்தமாளிகை படமும் டிஜிட்டலில் வெளியாகிறது.

இந்த படம் தெலுங்கில் நாகேஷ்வரராவ் நடித்து ‘பிரேம் நகர்’ என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு தமிழில் சிவாஜிகணேசன்-வாணிஸ்ரீ நடிக்க வசந்த மாளிகை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கே.எஸ்.பிரகாஷ் இயக்கினார். படம் 1972-ல் திரைக்கு வந்து 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இலங்கையிலும் அதிக நாட்கள் ஓடியது.

தமிழில் வந்த முதல் காதல் படம் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். காதலில் தோல்வி அடைந்தவர்கள் இந்த படத்தை பார்த்தபிறகுதான் தாடி வைக்க தொடங்கினர். வாணிஸ்ரீ கூந்தலும் பெண்கள் மத்தியில் பிரபலமானது. படத்தில் இடம்பெற்ற மயக்கமென்ன, யாருக்காக, குடி மகனே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், கலைமகள் கை பொருளே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

வசந்த மாளிகை படத்தை இயக்குனர் வி.சி.குகநாதன் பிலிமில் இருந்து நவீன தொழில்நுட்பமான டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளார். கலர் மற்றும் ஒளி, ஒலியிலும் மெருகேற்றப்பட்டு உள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்