மம்தா பானர்ஜி படத்துக்கு தடை விதிக்கப்படுமா?

மம்தா பானர்ஜி படத்துக்கு தடை விதிப்பது குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டுள்ளது.

Update: 2019-04-19 22:54 GMT

அரசியல் தலைவர்கள் வாழ்க்கை படங்களை தேர்தல் நேரத்தில் திரையிட எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. பிரதமர் நரேந்திரமோடி படத்துக்கு தேர்தல் கமிஷன் தடைவிதித்ததை எதிர்த்து படக்குழுவினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். என்.டி.ராமராவ் வாழ்க்கை படமும் சர்ச்சையில் சிக்கியது.

இப்போது மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘பாகினி பெங்கால் டைகர்ஸ்’ என்ற படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மம்தா பானர்ஜி அரசியலில் வளர்ந்து முதல்-மந்திரி ஆனது வரை உள்ள சம்பவங்களை வைத்து இந்த படத்தை நேகல் தத்தா இயக்கி உள்ளார்.

இதில் மம்தா பானர்ஜி வேடத்தில் நாடக நடிகை ரூமா சக்கரவர்த்தி நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி வாழ்க்கை படத்தை தேர்தலுக்கு பிறகே வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க பா.ஜனதா கட்சி தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளது.

படத்தின் இயக்குனர் நெர்கல் தத்தா கூறும்போது, “சாதாரண பெண் எப்படி போராடி முதல்-மந்திரி ஆகிறார் என்பதை படத்தில் சொல்லி இருக்கிறேன்” என்று விளக்கம் அளித்தார். இந்த படம் குறித்து மத்திய தேர்தல் கமிஷன் மேற்கு வங்க தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டுள்ளது. விளக்கத்தை பெற்ற பிறகு படத்துக்கு தடை விதிப்பதா? இல்லையா என்று முடிவு செய்யும்.

மேலும் செய்திகள்