இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? - நடிகை கஸ்தூரி விளக்கம்

இஸ்லாமிய பெண் தோற்றத்தில் இருப்பதுபோல் சமூக வலைத் தளத்தில் வைரலான புகைப்படம் குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-05-07 22:45 GMT

நடிகை கஸ்தூரி அரசியல் சமூக விஷயங்களை சமூக வலைத்தளத்தில் தைரியமாக பதிவிட்டு வருகிறார். இது சில நேரம் சர்ச்சைக்கு உள்ளாகி எதிர்ப்புகளையும் சம்பாதிக்கிறார். இந்த நிலையில் கஸ்தூரி இஸ்லாமிய உடையிலும், தொழுகை செய்வது போன்றும் இரண்டு புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த படங்களின் கீழ், “நாம் அனைவரும் ஒரே கடவுளை ஒரே நோக்கத்துக்காகத்தான் வழிபடுகிறோம். ஆனால் வார்த்தைகள் மட்டும் வெவ்வேறு” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி கஸ்தூரி இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் உங்கள் இஸ்லாமிய பெயர் என்ன என்று கேட்க, அதற்கு கஸ்தூரி தபஸ்ஸும் என்று பதில் அளித்தார். இதனால் அவர் மதம் மாறிவிட்டதாக பேச தொடங்கினர்.

இதுகுறித்து கஸ்தூரியை தொடர்புகொண்டு கேட்டபோது மதம் மாறவில்லை என்று மறுத்தார். அவர் கூறியதாவது:-

“நான் காதலுக்காகவோ அல்லது மற்ற பிரச்சினைகளுக்காகவோ மதம் மாற வேண்டிய தேவை இல்லை. எனக்கு நெருக்கமான இஸ்லாமிய குடும்பத்தில் வயதான பெண்ணும் ஆணும் உள்ளனர். அவர்களை நான் அம்மா, அப்பா என்றுதான் அழைக்கிறேன். இலங்கையிலும் எனக்கு தெரிந்த இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர் உள்ளனர்.

தெலுங்கில் தயாராகும் ‘அமராவதி’ என்ற படத்தில் ராணுவத்தில் பணியாற்றும் ஒரு இந்து இளைஞரை காதலிக்கும் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். அந்த படத்துக்கான எனது தோற்றத்தைத்தான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன்.” இவ்வாறு கஸ்தூரி கூறினார்.

மேலும் செய்திகள்